இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தினால் இந்தியா பல்வேறு பாதிப்புகளை சந்திக்க போவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த மாதங்களில் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 5 அமைப்புகள் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 6 தீர்மானங்களை கொண்டு வந்துள்ளன. இந்தியாவின் குடியுரிமை சட்ட திருத்தம் பெரும் மனித பேரிழப்பை ஏற்படுத்த இருப்பதாகவும், இந்த சட்டத்தால் உலகிலேயே அதிக அகதிகள் உள்ள நாடாக இந்தியா மாறும் எனவும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்திய அரசின் குடியுரிமை சட்டம் ஐக்கிய நாடுகள் சபையுடன் இந்தியா 2005ல் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையை மீறுவதாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த விவாதம் நாளை மறுநாள் ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் நடைபெற இருக்கிறது. ஆனால் இது தங்கள் நாட்டின் உள்விவகாரம் என்றும் மக்களாட்சி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாலேயே குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.