லத்தீன் அமெரிக்க நாடான ஈக்வடாரில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட கலவரத்தில் 80 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லத்தீன் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைக்கப்படுவதாகவும், கைதிகளுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படுவதில்லை என்றும் சிறைகளில் கைதிகள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஈக்வடாரில் உள்ள முக்கியமான மூன்று சிறைச்சாலைகளில் ஒரே சமயத்தில் கைதிகள் சிறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் கலவரமாக மாறிய நிலையில் கைதிகள் சிலர் சிறைச்சாலைக்கும் தீ வைத்துள்ளனர்..
இந்த திடீர் கலவரங்களால் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சிறைகளுக்குள் கலவரங்களை அடக்க சிறப்பு படைப்பிரிவுகளும் வரவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சிறையில் உள்ளவர்களின் உறவினர்கள் சிறைக்கு முன்னர் கூடியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.