முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போல பறவை ஒன்று வாழ தனது காரை விட்டு கொடுத்த துபாய் இளவரசருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
துபாய் பட்டத்து இளவரசராகவும், நிர்வாக கவுன்சில் தலைவராகவும் இருப்பவர் ஷேக் ஹம்தான் பின் ரஷித் அல் மக்தூம். இவர் நாள்தோறும் அலுவலகங்கள் மற்றும் வெளியிடங்களுக்கு செல்ல பல்வேறு வகைவகையான கார்களை பயன்படுத்தி வருகிறார்.
கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் காரணமாக இளவரசர் மக்தூம் வெளியே எங்கும் அதிகம் செல்லாமல் இருந்துள்ளார். நீண்ட நாட்கள் கழித்து வெளியே செல்ல தனது விலை உயர்ந்த காரை எடுக்க சென்ற போது அதன் முன்பகுதியில் சிறிய பறவை ஒன்று கூடுகட்டி வாழ்வதை கண்டுள்ளார். அந்த பறவை வாழ்வதற்காக தனது விலை உயர்ந்த காரை அப்படியே விட்டுவிட்டார்.
இதுகுறித்து துபாய் மக்கள் பலர் இளவரசரை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். அதேசமயம் நிறைய பணம், கார்கள் இருப்பதை காட்டும் இளவரசரின் மேல்தட்டு விட்டுக் கொடுத்தலே இது என சிலர் கூறியுள்ளனர்.