அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்திய அரசு அதிரடியாக 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்தியாவில் மிக அதிகமானோர் உபயோகப்படுத்தி வந்த டிக்டாக், ஹலோ ஆகிய செயலிகளும் இதில் அடங்கும்.
ஏற்கெனவே கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 59 செயலிகளும் நீக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே உபயோகத்தில் இருந்த செயலிகளையும் நெட்வொர்க் நிறுவனக்கள் மூலமாக மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில் டிக்டாக் செயலியை அமெரிக்காவும் தடை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகின.
தகவலின் படி, அமெரிக்காவின் ஃபெடரல் ஊழியர்கள் சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை அரசு வழங்கிய சாதனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவு அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
பயனர் விவரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எப்போது முதல் தடைசெய்யப்படுகிறது போன்ற விவரங்கள் வெளியாகாத நிலையில் டிக்டாக் நிறுவனத்திற்கு இது சோதனை காலமாகவே பார்க்கப்படுகிறது.