உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஐ.எஸ். அமைப்பை உருவாக்கியது எதிர் அணியில் இருக்கும் ஹிலாரி கிளிண்டன்தான் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் பேசியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வருகிற நவம்பர் மாதம் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.அவர்கள் இருவரும் தற்போது தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஒரு பிரச்சார மேடையில் பேசிய டொனால்டு “ ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை ஹிலாரி கிளிண்டன்தான் உருவாக்கினார். இதுபோன்ற ஒரு இயக்கத்தை உருவாக்கியதற்காக அந்த அமைப்பிடம் இருந்து அவர் பெரிய பரிசை பெறவேண்டும்” என்று அவர் பேசினார்.
மேலும், ஐ.எஸ் அமைப்பினர் நாடு முழுவதும் தாக்குதல் நடத்துவதற்கு, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டனின் பலவீனமான கொள்கைகளே காரணம் என்றும் அவர் கூறினார்.