Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீனா ஏவுகணைகளை நிறுத்தி மிரட்டல்: அமெரிக்கா குற்றச்சாட்டு!

சீனா ஏவுகணைகளை நிறுத்தி மிரட்டல்: அமெரிக்கா குற்றச்சாட்டு!
, சனி, 2 ஜூன் 2018 (19:03 IST)
தனது அண்டை நாடுகளை மிரட்டவும் அச்சுறுத்தவும் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஏவுகணைகளை நிலை நிறுத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
 
சிங்கப்பூரில் ஒரு மாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ் சீனாவின் நடவடிக்கைகள் அதன் நோக்கங்களை கேள்விக்கு உள்ளாக்குவதாக கூறினார்.
 
கப்பல்களைத் தாக்கும் ஏவுகணைகள், நிலத்திலிருந்து வான் நோக்கி சென்று தாக்கும் ஏவுகணைகள், மின் கருவிகளை செயலிழக்க வைக்கும் கருவி ஆகியவற்றை சீனா தென் சீனக் கடலின் பல்வேறு பகுதிகளில் நிறுவியுள்ளதாகக் கூறினார்.
 
இந்த மாதம் சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோர் சந்திக்கும்போது தென்கொரியாவில் அமெரிக்க படைகள் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவது குறித்த பிரச்சனை விவாதிக்கப்பட மாட்டாது என்று அவர் தெரிவித்தார்.
 
அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் இருக்கும் விவகாரமும், வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் குறித்த விவகாரமும் வெவ்வேறானவை என்று சாங்ரி-லா பாதுகாப்பு உச்சிமாநாட்டில் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் சாங் யங்-மூ கூறியுள்ளார்.
தென்கொரியாவில் சுமார் 28,500 அமெரிக்க ராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர். சீனாவுடன் தாங்கள் ஆக்கப்பூர்வமான உறவு கொள்ளவே விரும்புவதாகவும், தேவைப்பட்டால் போட்டியிடவும் செய்வோம் என்றும் மேட்டிஸ் பேசினார்.
 
முக்கிய வர்த்தக வழித்தடமாக இருக்கும் தென் சீனக் கடலின் ஒரே பகுதியை சீனா, தைவான், வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனீசியா ஆகிய ஆறு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.
 
அப்பகுதியில் உள்ள தீவுகளையும் கடல்சார் வசதிகளையும் சீனா ராணுவ பயன்பாட்டுப் பகுதிகளாக உருவாக்கி வருகிறது. அங்குள்ள உட்டி தீவில் கடந்த மாதம் சீனா குண்டு வீசும் விமானங்களை நிலை நிறுத்தியது. 
 
யாங்சிங் என்று சீனா அத்தீவை அழைக்கிறது. தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் அந்த தீவுக்கு உரிமை கோருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

15 நிமிடம் கூட லீவ் எடுக்கல... புலம்பும் மோடி!