50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகே வந்துள்ள பச்சை வால்மீனை மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
விண்வெளியில் பெரிய ராட்சத வால்மீன்கள் பல உள்ள நிலையில் அவை ஒரு குறிப்பிட்ட சுற்றுவட்ட பாதையை கொண்டுள்ளன. சில வால்மீன்கள் சூரிய குடும்பத்திலிருந்து இண்டெஸ்டல்லார் பகுதியையும் தாண்டி பயணித்து மீண்டும் சூரிய குடும்பத்திற்குள் வந்து செல்கின்றன.
அவ்வாறாக மிகப்பெரிய சுற்றுவட்ட பாதையை கொண்ட வால்மீன் C/2022 E3 (ZTF) இந்த வால்மீன் ஒருமுறை தன் சுற்றுவட்ட பாதையை முடிக்க 50 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். கடந்த ஜனவரி மாதம் சூரியனை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்த இந்த பச்சை வால்மீன் தனது அடுத்த சுற்று பயணத்திற்காக புறப்பட்டுள்ளது.
நேற்று இந்த வால்மீன் பூமிக்கும் மிக நெருக்கமான தூரமான 42 மில்லியன் கிலோ மீட்டரை நெருங்கியது. சூரிய குடும்பத்திற்கு டாட்டா சொல்லிவிட்டு கிளம்பி செல்லும் இந்த பச்சை வால்மீனை நேற்று பல பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆர்வமாக கண்டு களித்தனர். வெறும் கண்களால் பார்க்க முடியாத நிலையில் பல பகுதிகளில் தொலைநோக்கி வாயிலாக மக்கள் இந்த பச்சை வால்மீனை கண்டு களித்தனர்.
கடந்த முறை இந்த வால்மீன் வந்தபோது பூமியில் நவீன மனிதர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.