வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது செய்யப்பட்டதற்கு இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க பாடகியும் கண்டனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தின் இந்து மத தலைவர் மற்றும் இஸ்கான் அமைப்பைச் சேர்ந்தவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் என்பவரை அந்நாட்டு போலீசார் கைது செய்தது. மேலும், அவர் மீது போராட்டங்களை தூண்டிவிட்டதாக தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில், அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுத்து காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இந்து மத துறவியை விடுதலை செய்யக்கோரி ஏராளமான வங்கதேச இந்துக்கள் திரண்டு போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதாகவும், இதனால் ஏராளமானோர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஆப்பிரிக்க-அமெரிக்க நடிகை மற்றும் பாடகி மேரி பில்பென் என்பவர், இந்து மதத் துறவி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், சின்மோய் கிருஷ்ண தாஸ் சிறைவாசம் மற்றும் வங்கதேசத்தில் தீவிரவாதிகளால் இந்துக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல், உலக தலைவர்களால் கவனிக்கப்பட வேண்டும். மத சுதந்திரத்தையும் உலக அளவில் அனைத்து விசுவாசிகளின் பாதுகாப்பையும் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.