பிரேசில் நாட்டை சேர்ந்த அமேசான் காடுகளின் ஆர்வலர் பவுலோ பவுலினோ, கடத்தல்காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
	
	
	அமேசான் காடுகளில் உள்ள மரங்களை வெட்டி கடத்துகிற கடத்தல்காரர்களை தடுக்கும் பாதுகாவலர்கள் அமைப்பின் தலைவராக திகழ்ந்தவர் பவுலோ பவுலினோ குவாஜாஜாரா. கடந்த வெள்ளிக்கிழமை இவர் பிரேசிலின் மரன்ஹாவோ மாநிலத்தின் அராரிபொயா என்ற பகுதியில் வேட்டைக்காக சென்றபோது, மரக்கடத்தலில் ஈடுபட்ட கும்பலை தடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் கடத்தல்காரர்கள் இவரை முகத்தில் சுட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	பவுலினோ சுடப்பட்டது குறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்நாட்டின் நீதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜியோ மோரோ, “கொலைக்கு யார் பொறுப்பாளியோ அவர்களுக்கு உடனே தண்டனை வழங்கப்பட்டு நியாயம் நிலைநாட்டப்படும்” என கூறியுள்ளார்.
பவுலினோ, குஜாஜாரா என்னும் 20,000 நபர்கள் கொண்ட பாதுகாவலர்கள் அமைப்பின் தலைவர் ஆவார். அவா குவாஜா என்ற பழங்குடியினத்தை சேர்ந்த இவர்கள் வெளி உலக ஆட்களுடன் எந்த தொடர்பையும் வைத்துக்கொள்ளாத, காடுகளின் மத்தியில் வாழக்கூடியவர்கள். கடந்த செப்டம்பர் மாதம், டபாடிங்கா என்னும் நகரில் பூர்வ குடிகளை பாதுகாப்பதற்காக பணியாற்றிய அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், தற்போது அமேசான் காடுகளின் பாதுகாவலர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.