வங்கதேசத்தில் தற்போது கலவரம் நடந்து வரும் நிலையில் அங்கு உள்ள இந்தியர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வீட்டை பூட்டி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்துள்ளது.
வங்கதேசத்தில் மாணவர்கள் மற்றும் காவல் துறையினர் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில் அங்கு வன்முறை ஏற்பட்டுள்ளது. வங்கதேசம் - பாகிஸ்தான் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு அரசு பணியில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது.
ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால் இட ஒதுக்கீடு முறை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் 30% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டிருந்ததால் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் கலவரமாக மாறி உள்ள நிலையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. வங்கதேச வன்முறையில் மூன்று மாணவர்கள் உட்பட ஆறு பேர் இதுவரை உயிரிழந்திருக்கும் நிலையில் வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.