தென்கொரியாவில் ஊழல் புகாரில் சிக்கிய எம்.பி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவில் ஜஸ்டிஸ் கட்சியின் எம்.பி.யாக இருந்து வந்தவர் தான் ரோக் ஹோ சான். இவர் மீதும் பல அரசியல் பிரமுகர்கள் மீதும் ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதனையடுத்து தென்கொரிய அரசு, இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டது. புலனாய்வு அமைப்பினரும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் எங்கே சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில் இருந்த ரோக், புலனாய்வு அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்த வரும் நேரத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவரது அறையிலிருந்து போலீஸார், ரோக் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் நான் லஞ்சம் பெற்றது உண்மை. நான் தவறு செய்து விட்டேன். எனது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தென்கொரிய அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.