இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் மூன்று மீனவர்களுக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்து வருவது தொடர்கதை ஆகி வருகிறது. மேலும் மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு, சமூகத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அண்மையில் கைதான ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை இன்று விடுதலை செய்து இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், 3 மீனவர்களுக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது