தலிபான் அச்சுறுத்தல்களையும் மீறி பெண் கல்விக்கு ஆதரவாளித்து வரும் 14 வயது சிறுமியான மலாளா யூசப்ஸாய் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
தலிபான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் பெண்கள் கல்வி கற்பது தடை செய்யப்பட்டுள்ளது. பதினான்கு வயதான மலாளா யூசப்ஸாய், ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள பெண்களின் கல்விக்காக உழைத்தவர்.
அவரின் இந்த அறப்போராட்டத்திற்க்கு பாகிஸ்தானின் முதல் தேசிய சமாதான விருதை வழங்கி அரசு கவுரவித்துள்ளது. மேலும் அவருடைய பெயர் சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்வாட் பள்ளத்தாக்கின் முக்கிய நகரமான மின்கோராவில் வேனில் வந்த மர்ம மனிதர் பள்ளியிலிருந்து வீடு திரும்பி கொண்டிருந்த மலாளா யூசப்ஸாய் மற்றும் அவரது தோழிகளை நோக்கி துப்பாக்கியால் சூட்டுள்ளார்.
தலையில் பாய்ந்துள்ள குண்டால் உயிருக்கு போராடிய நிலையில் மலாளா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
துப்பாக்கி ஏந்திய நபர் யூசப்ஸாயின் அடையாளம் குறித்து மக்களிடம் விசாரித்து பின்னர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரியவந்துள்ளது.எனினும் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
யூசப்ஸாயுடன் மற்றொரு தோழிக்கும் குண்டு பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அவர் மயக்க நிலையில் இருப்பதாகவும், அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.