Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக சினிமா - The Visit

உலக சினிமா - The Visit

உலக சினிமா - The Visit
, வியாழன், 21 ஜூலை 2016 (14:44 IST)
சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படத்தின் மூலம் ஹாரர் படவுலகில் புயலென நுழைந்தவர் மனோஜ் நைட் சியாமளன்.


 
 
திகில் படங்களின் பிதாமகன் ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் வாரிசு என்று அப்போது சியாமளன் வர்ணிக்கப்பட்டார். அதற்கேற்ப அவரது அடுத்தடுத்தப் படங்களும் - அன்பிரேக்கபிள், சைன்ஸ், த வில்லேஜ் - ரசிகர்களை பயமுறுத்தியது. ஆனால், பயத்தின் சதவீதம் படத்துக்குப் படம் குறைந்து, லேடி இன் த வாட்டர், த ஹேப்பனிங் போன்ற அவரது அடுத்தடுத்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மண்ணை கவ்வின.
 
பெரும் பொருள் செலவில் உருவான த லாஸ் ஏர்பென்டர், ஆப்டர் எர்த் இரண்டும் சியாமளன் பெரிய பட்ஜெட் படங்களுக்கு வொர்த் இல்லை என்பதை நிரூபித்தன. சியாமளனின் சேப்டர் அவ்வளவுதான் என்று ஹாலிவுட் முடிவுகட்டிய நேரம் - சென்ற வருடம் வெளியானது த விசிட். சியாமளனின் நின்று விளையாடிய ஹாரர் கிரவுண்டில் தயாரான சின்ன பட்ஜெட் படம். படத்தின் மொத்த பட்ஜெட் வெறும் 5 மில்லியன் டாலர்கள் மட்டுமே.
 
பெக்கா என்ற 15 வயது சிறுமியும், அவளது தம்பி 13 வயது டெய்லரும், அவர்கள் இதுவரை சந்தித்திராத தங்களின் பாட்டி, தாத்தாவை காணச் செல்கிறார்கள். பெக்கா, டெய்லாரின் தாய் 15 வருடங்களுக்கு முன் தனது தாய், தந்தையின் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து கொண்டதால் கடந்த 15 வருடங்களாக அவர்களுடன் தொடர்பு இல்லாமலிருக்கிறார். அவள் காதலித்து திருமணம் செய்தவனும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஓடிப் போய்விட்டான். இரண்டு குழந்தைகளுடன் வசித்துவரும் அவளைப் பற்றி இணையத்தில் அறிந்து கொள்ளும் அவளது தாயும், தந்தையும் தங்களின் பேரக்குழந்தைகளை காண ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்காக பெக்காவையும், டெய்லரையும் தனியாக அவர்களிடம் அனுப்பி வைக்கிறாள்.
 
தாத்தாவை பாப் பாப் என்றும் பாட்டியை நானா என்றும் அழைக்கிறாள் பெக்கா. அவர்களின் பண்ணை வீடு ஒதுக்குப்புறமாக இருக்கிறது. இந்த பயணத்திற்கு திட்டமிட்ட உடனேயே அதனை ஆவணப்படுத்தும் முயற்சியாக அனைத்தையும் கேமராவில் பதிவு செய்து வருகிறாள் பெக்கா. நானாவும், பாப் பாப்பும் அவர்களிடம் அன்பாக இருக்கிறார்கள். நானா அவர்களுக்கு விதவிதமாக சமைத்துப் போடுகிறாள். 
 
முதல்நாள் இரவில் பாப் பாப் அவர்களிடம். பெட் டைம் 9.30. அதற்கு மேல் படுக்கையறையைவிட்டு வெளியே வரவேண்டாம் என்கிறார். பெக்கா சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா என்று இரவில் வெளியே வருகிறாள். அப்போது நானா வாந்தி எடுப்பதை கவனிக்கிறாள்.
 
அது குறித்து அவள் பாப் பாப்பிடம் மறுநாள் கூறுகிறாள். நானாவுக்கு வயிற்றுப் பிரச்சனை இருப்பதாக பாப் பாப் கூறுகிறார். ஆனால், தொடரும் நாள்களில் அவர்கள் அதிர்ச்சிகரமான விஷயங்களை தங்களின் தாத்தா, பாட்டியின் நடவடிக்கைகளில் பார்க்கிறார்கள். காலையில் சாந்தமாக இருக்கும் நானா இரவில் ஒரேயடியாக மாறிப் போகிறார். அதேபோல் பாப் பாப்பின் நடவடிக்கையும் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
 
இனியும் அங்கு தங்க முடியாது என்ற நிலையில் ஸ்கைப் மூலம் தங்கள் தாயுடன் பேசுகிறார்கள். ஸ்கைப்பில் நானா, பாப் பாப்பை பார்க்கும் அவர்களின் தாய் கூறும் விஷயம் அவர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. 
 
வரிசையாக தோல்விப் படங்கள் தந்த சியாமளனுக்கு இந்தப் படம் ஒரு திரும்பி வரவாக அமைந்தது. படத்தில் பேய், பிசாசு எதுவுமில்லை. மெல்லிய நகைச்சுவையுடன் த்ரில்லாக செல்கிறது படம். நானா, பாப் பாப்பின் அதிர்ச்சியூட்டும் நடவடிக்கைகள் உருவாக்கும் பயத்துடன் நகர்ந்து, ஓரளவு எதிர்பார்த்த கிளைமாக்ஸுடன் படம் முடிகிறது. 
 
தொடர் தோல்விகளை சந்தித்தவர்கள் சின்ன பட்ஜெட் படத்தில் எப்படி மீண்டெழ முடியும் என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம்.
 
(சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படத்துக்கு முன் சியாமளன் இரு படங்கள் இயக்கியிருந்தாலும், அவரை உலகறியச் செய்தது சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படமே)

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கபாலி படம் சூப்பர்! : சினிமா விமர்சகரின் பார்வை