ஆஸ்கர் விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்ற நட்சத்திரங்களின் அங்கியில் மின்னிய உக்ரைன் கொடியால் நெகிழ்ச்சி.
உலகம் முழுவதும் சினிமா துறையினரால் மிகவும் எதிர்பார்க்கப்படும், அதிகம் பேசப்படும் விருதாக அகாடமி விருதுகள் எனப்படும் ஆஸ்கர் விருதுகள் உள்ளன. இந்த ஆண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருது விழா நடந்த நிலையில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வாசகங்கள் திரையிடப்பட்டன. முன்னதாக இந்த விழாவில் உன்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி காணொளி காட்சி வாயிலாக தோன்றிப் பேசுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்குப் பதிலாக, வாசகங்கள் திரையிடப்பட்டன.
இந்நிலையில் ஆஸ்கரின் பாரம்பரியமிக்க சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்ற கலைஞர்களில் பெரும்பாலானோர் உக்ரைன் நாட்டு கொடியை தங்களது அங்கியில் இடம் பெற செய்திருந்தனர். சிலர் உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு ஆதரவாக நீல நிறத்திலான ரிப்பனை அணிந்து வந்திருந்தனர்.
சிவப்பு கம்பளத்தை ஒரு மேடையாக பயன்படுத்தி உக்ரைனுக்கு ஆதரவாக தங்கள் குரலை ஒலிக்க செய்துள்ளனர் ஆஸ்கரில் பங்கேற்ற கலைஞர்கள். உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆஸ்கார் விழாவில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.