Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேட்மேன்: விமர்சனம்!

பேட்மேன்: விமர்சனம்!
, சனி, 5 மார்ச் 2022 (08:29 IST)
நடிகர்கள்: ராபர்ட் பேட்டின்சன், ஜோ க்ரேவிட்ஸ், பால் டேனோ, ஜெஃப்ரி ரைட், ஜான் டர்ட்டரோ; ஒளிப்பதிவு: க்ரெய்க் ஃப்ரேஸர்; இயக்கம்: மேட் ரீவ்ஸ்.
 
மற்ற சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இருந்து Batman வரிசை திரைப்படங்கள் பெரிதும் மாறுபட்டவை. மிகத் தீவிரமான நோக்கம், உரையாடல்களுடன் நகர்பவை இந்தப் படங்கள். தற்போது வெளியாகியிருக்கும் Batmanனும் அதேபோலத்தான் என்றாலும், பேட்மேனின் துப்பறியும் திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை உருவாக்கியிருக்கிறார் மேட் ரீவ்ஸ்.
 
கோதம் நகரின் மேயரான டான் மிச்செல் ஜூனியர் (ரூபர்ட் பென்ரி - ஜோன்ஸ்) ஒரு சீரியல் கொலைகாரனால் கொல்லப்படுகிறான். ரிடிலர் (பால் டானோ) என பெயர் வைத்துக்கொண்டிருக்கும் அந்த நபர், பேட்மேனுக்கு ஒரு வாழ்த்து அட்டையையும் சில துப்புகளையும் விட்டுச் செல்கிறான். இந்தக் கொலையை காவல்துறையின் துணை ஆணையருடன் சேர்ந்து துப்பறிய ஆரம்பிக்கிறான் பேட்மேன் (ராபர்ட் பேட்டின்சன்).
webdunia
அப்போதுதான் மேயரின் நிழலான பக்கங்கள் தெரியவருகின்றன. இந்த விவகாரத்தைத் துப்பறிந்துவரும்போது, மாவட்ட தலைமை வழக்கறிஞரான கில் கால்சன் (பீட்டர் சார்ஸ்கார்ட்) கடத்தப்படுகிறான். ஒரு பொது இடத்தில் வைத்து பேட்மேன் முன்பாகவே கொல்லப்படுகிறான்.
 
உண்மையில் இந்தக் கொலைகளைச் செய்வது யார், ஏன் செய்கிறான், கோதம் நகருக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து அந்த நகரைக் காப்பாற்ற முடிகிறதா என்பதெல்லாம் மீதிக் கதை.
 
முன்பே கூறியபடி, முந்தைய பேட்மேன் படங்களில் இருந்து நிச்சயம் மாறுபட்ட ஒரு படைப்பாக இந்தப் படம் வெளியாகியிருக்கிறது. பொதுவாக டிசி காமிக்ஸின் ரசிகர்களின் ரசனையை ஒட்டியே பேட்மேன் படங்கள் வெளியாகிவந்த நிலையில், இந்தப் படத்தில் பொது ரசிகர்களையும் வெகுவாக நெருங்கச் செய்திருக்கிறார் மேட் ரீவ்ஸ்.
 
இதற்கு முக்கியமான காரணம், நன்மை - தீமை, குற்றவாளி - நல்லவன் போன்ற தத்துவ உரையாடல்களை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, 70களில் வெளிவந்த பேட்மேனைப் போல துப்புத் துலக்குவது, அதிரடி ஆக்ஷனில் இறங்குவது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
 
கொலைகளைத் துப்பறிவது என்றவுடன் ஷெர்லக் பாணியிலான துப்பறியும் படமாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஓரம்கட்டும்வகையில், பேட் மேனுக்கே உரிய இருள் நிறைந்த, ஒரு அடர்த்தியான கதையை முன்வைத்திருப்பதும் சிறப்பாக இருக்கிறது.
 
குறிப்பிட்ட இடைவெளியில் ஆக்ஷன் காட்சிகளும் துரத்தல்களும் வருவது படத்தில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது.
 
க்ரிஸ்டன் பேல், பென் ஆஃப்லக் போன்றவர்கள் நடித்த ப்ரூஸ் வெய்ன்/பேட்மேன் பாத்திரத்தில் ராபர்ட் பேட்டிசன் நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பு சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது.
 
இந்தப் படத்தில் திரைக்கதைக்கு அடுத்தபடியாக கவனிக்க வேண்டிய இரண்டு அம்சங்கள், பின்னணி இசையும் ஒளிப்பதிவும். பேட்மேன் வரிசை திரைப்படங்களே உரிய வண்ணங்களின் தொனி மாறாமல் அட்டகாசம் செய்திருக்கிறது ஒளிப்பதிவு.
 
படம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுகிறது. சற்று நீளத்தைக் குறைத்திருக்கலாம். ஆனால், பேட்மேன் ரசிகர்களுக்கு திகட்டாத திரைப்படம்தான் இது.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரிக்கெட் உலகிற்கு பெரும் சோகம்…சூப்பர் ஸ்டார் இரங்கல்