அனைத்துலக பெண்கள் தினமான இந்த நாளில் எங்கள் வீரப்பெண்களை அவர்களின் வீரதீரங்களை நாம் ஒருகணம் மனதினில் நிறுத்திட வேண்டும்.
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா என்றார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். அது மட்டுமல்லாமல் பல துறைகளிலும் சாதனை படைத்து வருகிறாள். ஆண்களை எட்டுவது சிரமம் என்ற நிலையிலிருந்து முன்னேறி ஒவ்வொரு துறையிலும் பெண்கள் ஆண்களுக்கு கடுமையான போட்டியை தந்து வருகிறார்கள்.
பண்டைய காலத்தில் ஆணுக்கு இணையாக பெண்களும் கல்வியறிவு கொண்டிருந்தனர். ஒளவையார், வெண்ணிக் குயத்தியர், காக்கைப் பாடினியார் நச்செள்ளயார், ஒக்கூர் மாசாத்தியார், நக்கண்ணையார். ஆண்டாள் என தமிழ் வளர்த்த மகளிர் அதிகம். தங்களது கல்வித்திறமையால் மன்னர்களிடத்தே நன்மதிப்பை பெற்றிருந்தனர்.
இன்றைய காலகட்டத்தில் பெண்களின் நிலைமை எப்படி இருக்கின்றது என சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒரு நாளைக்கு எத்தனை செய்திகள் வருகின்றன ஊடகங்களில் என்பதை பார்க்கிறோம். கல்வியில், வேலைவாய்ப்பில், வீட்டில், குழந்த பாரமரிப்பில் என அனைத்திலும் நம்மால் சுகந்திரமாக செயல்பட முடிகிறதா என்றால் அது கேள்வி குறியாகத்தான் உள்ளது.
பெண்கள் எல்லா துறைகளில் முன்னேறினாலும், அனைத்து சலுகைகள் கிடைத்தாலும், சமுதாயத்தின் அடித்தட்டுப் பெண்களின் நிலை வருத்தத்துக்குரியது. வரதட்சணை, சீர் போன்ற சீர்கேடுகளில் எந்தவித மாற்றமும் இல்லாமல் உருமாறி உள்ளதை நம்மால் காண முடிகிறது.
நள்ளிரவில் ஒரு பெண் நகைகள் அணிந்து பாதுகாப்பாக சென்று வர முடிகிறது என்றால் அது தான் சுதந்திரம் என்று மகாத்மா காந்திஜி சொன்னது நனவாகியதா என்று நினைத்து பாருங்கள். நகைகள் ஏதுமின்றி, பட்டப் பகலில், மக்கள் நிரம்பி வழியும் இடங்களுக்கு பாதுகாப்பாக சென்று வருவது கூட இன்றைய சூழ்நிலையில் கேள்விக் குறியாகவே உள்ளது.
எனவே பாதுகாப்பும் சுகந்திரமும் பெண்களுக்கு முதலில் அவளது வீட்டில் இருந்தே தொடங்கவேண்டும். இதனை அனைவருமே கடைபிடித்தால் வீடும் நாடும் செழிப்புறும். பெண்களை போற்றுவோம்.