தாய், மனைவி, அக்கா, தங்கை, தோழி என அனைத்து பரிமானத்திலும் ஆண்களுக்கு ஊக்கமளித்து உறுதுணையான திகழும் பெண்களின் பாதுகாப்பு இன்னமும் இந்தியாவில் கேள்வி குறியாகவே இருக்கிறது.
இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேஷ், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இது குறித்த செய்திகளை ஊடகங்கள் வாயிலாக தெரிந்துகொள்ளும்போது, எங்கோ, யாரோ ஒரு பெண்ணுக்கு கொடுமை நடத்திருக்கிறது என அலட்சியமாக இருப்பது தவறு.
இந்நிலையில், இத்தகைய அவலங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க இந்திய அரசு தன்னால் இயன்றவரை முயன்றாலும், பெண்கள் தங்களை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தற்காத்துகொள்ள சில விஷயங்களை பின்பற்றலாம்.
1. தனியாக பயணம் செய்யும்போது, அந்த இடத்தின் சுற்றுபுறத்தில் ஏதாவது தப்பாக இருப்பதுபோல் தெரிந்தால் உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியேறுங்கள்.
2. ஈவ் டீசிங்கில் இருந்து காத்துக்கொள்ள தைரியமாக எச்சரியுங்கள், அதை மீறியும் கேலி கிண்டல் தொடர்ந்தால் கூச்சபடாமல் அருகிலிருப்பவர்களை உதவிக்கு அழையுங்கள்.
3. முடிந்தவரை இரவில் தனியாக பொது போக்குவரத்தில் பயணிப்பதை தவிர்த்துவிடுங்கள்.
4. உங்கள் சொந்த வாகனத்தில் பயணிக்கும்போது, அந்நியர்களுக்கு லிப்ட் கொடுக்காதீர்கள். தனிமையான இடத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டாம். வழக்கப்பட்ட வழியிலேயே செல்லுங்கள், புதிய வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
5. உங்களை யாராவது பின்தொடர்வது போல் தெரிந்தால், உடனடியாக கூச்சலிட்டு உதவிக்கு யாரையாவது அழையுங்கள். பயத்தில் அவசரமாக ஓடும்போது கூட கூச்சலிட மறவாதீர்கள்.
6. செல்போனில் அவசர தேவைக்காக ஸ்பீட் டயலில் முக்கியமான நண்பர்கள் அல்லது குடும்ப நபர்களின் எண்ணை பதிவு செய்து வையுங்கள்.
7. தனியாக பயணிக்கும்போது செல்போனை கையில் வைக்காதீர்கள், ஒருவேளை யாரிடமாவது சிக்கிகொண்டால் முதலில் செல்போனைத்தான் உங்களிடிமிருந்து பறிப்பார்கள்.
இவை அனைத்தையும் மீறி, பாலியல் வன்முறையை எதிர்கொள்ள நேரிட்டால்,
1. உடனடியாக செல்போனில் நீங்கள் கடைசியாக பேசியவர்களுக்கு, போனை கையில் வைத்தபடியே தொடர்புகொண்டு நீங்கள் இருக்கும் இடத்தை சத்தமிட்டு கூறுங்கள்.
2. பையில் இருக்கும் குடை, பேனா போன்றவற்றை பயன்படுத்தி காமுகர்களை காயபடுத்தி தப்பிக்கலாம்.
3. உங்கள் எதிராளியை தாக்கும்போது முழு வலுவையும் பயன்படுத்தி முதல் அடியிலேயே அவனை வீழ்த்த முயலுங்கள்.
4 .உங்களை தற்காத்துக்கொள்ள எதிராளியின் முன்பக்க கழுத்து பகுதி, மார்பு மற்றும் வயிற்று பகுதிகளில் பலமாக குத்துங்கள். எதிராளியை சமாளிக்கும் அளவிற்கு சக்தியில்லை என்றால் சற்றும் யோசிக்காமல் விரல்களினால் அவனில் கண்களை குத்திவிட்டு ஓட்டமெடுங்கள்.
5. நடைமுறையில் பின்பற்ற கடினமாக இருந்தாலும், ஒரு சிறிய கவரில் மிளகாய் பொடியை நிரந்தரமாக பையில் வைத்திருங்கள்.
இவ்வாறான தற்காப்பு முறைகளை பயன்படுத்திதான் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற அவல நிலை மாறும் வரை இந்திய பெண்கள் உஷாராக இருப்பது அவசியமாக உள்ளது.