சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியான ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோடைக் காலத்தில் ஏற்படும் வறட்சி காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்க ஆலோசனை நடந்து வருகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகம் என்பது பொள்ளாச்சியில் துவங்கி, டாப் சிலிப், மானாம்பள்ளி, வால்பாறை, உடுமலை, அமராபதி ஆகிய 6 வனச்சரகங்களை உள்ளடக்கியதாகும்.
உயர்ந்த மலைகளும், அடர்ந்த காடுகளும் நிறைந்த இப்பகுதியில் ஏராளமான காட்டு விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இங்குள்ள மிருகங்களுக்கு பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் ஆழியாறு, நவமலை உள்ளிட்ட சில இடங்களும், டாப்சிலிப்பில் கோழிக்கமுத்தி, வரகழியாறு, சின்னாறு, ஆனகுந்தி ஆகிய இடங்களுமே முக்கிய நீராதாரமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதிகளில், கோடைக் காலத்தில் ஏற்படும் கடும் வறட்சியின் காரணமாக காட்டு விலங்குகளுக்கு நீர்ப்பற்றாக்குறை ஏற்படும். கோடைக் காலத்தில் சிற்றோடைகளும், ஆறுகளும் வரண்டு விடுவதாலும், அணைக்கட்டுகளில் தண்ணீர் குறைந்து விடுவதாலும் மிருகங்கள் குடிநீருக்காக பல இடங்களுக்கு சுற்றித் திரியும்.பொதுவாக வனத்தின் அழகை ரசிக்கவும், காட்டு விலங்குகளைப் பார்க்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கோடை விடுமுறைக்கு இப்பகுதிகளுக்கு வருவதுண்டு.இந்த நிலையில் குடிநீர் தேடி காட்டு விலங்குகள் பல்வேறுப் பகுதிகளில் சுற்றித் திரியும் என்பதால், இப்பகுதியில் தற்சமயத்திற்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க தடை விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும், வனம் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ஆனைமலை புலிகள் காப்பகம் மூடப்படுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.சுற்றுலாப் பயணிகள் செல்லும் இடங்களில், அனுமதி மறுக்கப்படும். கோடைக் காலம் முடிந்து, நீர் ஆதாரம் அதிகரித்த பிறகே மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர். எப்போதில் இருந்து புலிகள் காப்பகம் மூடப்பட உள்ளது என்பது இன்னும் முடிவாகவில்லை. விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.