எப்போதும் செவியில் ஒலித்துக்கொண்டிருக்கும் நீரோட்டத்தின் ஓசை, எங்கு திரும்பினாலும் வாழைத் தோட்டத்தால் மூடப்பட்டு பசுமையாய் காட்சிதரும் வயல்வெளிகள், ஊரைச் சுற்றி பெரும் சுவர் எழுப்பியதுபோல உயர்ந்த மலைகள், இடையறாது வீசிக்கொண்டிருக்கும் மாசற்றக் காற்று.
இப்படி நாம் வர்ணிக்கும் ஒரு அழிகிய பூமி, காஷ்மீரிலல்ல, நமது தமிழ்நாட்டிலேயே உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியின் முடிவில், நீலகிரி மாவட்டத்தின் எல்லையாகத் திகழும் தெங்கு மரஹாடா எனும் இடம்தான் இப்படியுள்ளது.
பரந்து விரிந்த சத்தியமங்கலம் வனத்தில் புகுந்து, கரடு முரடான பாதையில் (சுமோ, குவாலிஸ் போன்ற வலிமையான வாகனத்தில்) 28 கி.மீ. பயணம் செய்துதான் இந்த அழகிய பூமியைக் காண முடியும். ஆனால் பயணப்பாதை எல்லா ஆபத்துக்களும், இயற்கையின் வன அழகையும் கொண்ட சாகசமான அனுபவமாக இருக்கும்.
போகும் வழியில் யானைகளைக் காணலாம், கூட்டம் கூட்டமாக மான்களையும், காட்டெருமைகளையும் காணலாம். பகலாக இருந்தால் வாழ்க்கையில் பார்த்திராத - செம்போத்து போன்ற - பல அரிய பறவைகளைக் காணலாம். மயில்கள் மிகச் சாதாரணம். மாலை நேரத்தில் பயணம் மேற்கொண்டால், முயல், முள்ளம்பன்றி, யானைகள், நரிகள், கரடிகள், சிறுத்தைகள் என்று பல விலங்குகளைக் காணலாம்.
இப்படி இரண்டு, மூன்று மணி நேரம் பயணம் செய்து காட்டின் முடிவிற்கு வந்தால் மாயாறு (மோயாறு என்றும் கூறுவார்கள்) வரும். நீலகிரி மலைப் பகுதியில் அமைந்துள்ள குந்தா நீர் மின் நிலையங்களிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் இந்த ஆற்றில் வருகிறது. எப்பொழுது நீர்வரத்து அதிகரிக்கும் என்று யாருக்கும் தெரியாது... அதனால் மாயாறு என்றழைக்கின்றனர்.
இந்த ஆற்றைக் கடக்க பரிசல்கள் உண்டு. பரிசலில் கடந்து தெங்கு மரஹாடாவிற்குச் செல்ல வேண்டும். ஊருக்குள் செல்ல ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். இருமங்கிலும் இயற்கையும், வயலும் சூழ்ந்த அருமையான காட்சியைக் கண்டுகொண்டே நடக்கலாம்.இந்த ஊரில் வசிக்கும் மக்களுக்கு இந்த ஊரின் நிலங்கள் சொந்தமல்ல. இன்றுவரை வனத் துறைக்குச் சொந்தமானதாகவே உள்ளது. எப்படியிருக்கிறது இந்த ஊர் என்பதை நாங்கள் அளித்துள்ள வீடியோவில் கண்டாலும், அது நேரில் பார்ப்பதற்கு ஈடாகாது. நண்பர்களுடன் ஒரு முறை சென்று பாருங்கள்.எச்சரிக்கை : இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. தெங்கு மரஹாடா செல்லும் பாதையை தவிர்த்து வனத்திற்குள் செல்லும் பாதைகளுக்குள் சென்று விடாதீர்கள். மிக ஆபத்தானது. இங்கு செல்வதற்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்தில் அல்லது நான்கு சக்கர வாகனத்தில் செல்வது மட்டுமே பாதுகாப்பானது. கட்டாயம் இரு சக்கர வாகனத்தில் செல்லாதீர்கள்.ஐந்து ஆறு பேராக கூட்டமாகச் செல்வது நல்லது. விலங்குகளைக் கண்டால் அமைதியாக பாருங்கள். அவைகளை உசுப்பி விட்டால் பிறகு ஓடுவதற்கு இடமேதும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தெங்கு மரஹாடா - புகைப்படத் தொகுப்பு!
அடுத்த கட்டுரையில்