இரண்டு காதுகளை கையால் பிடித்துக் கொண்டு, விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போடுகிறார்கள். கைகளால் காதுகளை அழுத்திப் பிடிக்கும் போது, காதின் வழியாக மூளைக்குச் செல்லும் நரம்புகள் உணர்வு பெற்று, மூளைக்கு இரத்தம் நன்றாகப் பாய்கிறது. அதன் காரணமாக அறிவு வளர்ச்சி பெறுகிறது என்று அறிவியல் கூறுகிறது. இதைத்தான் ஆன்மீகவாதிகள் விநாயகர் முன் இரண்டு கைகளால் காதுகளைத் தொட்டு தோப்புக்கரணம் போட்டு தலையில் குட்டிக்கொண்டால் அறிவு வளரும் என்றார்கள். வகுப்பில் படிப்பில் கவனக்குறைவுள்ள மாணவர்களை ஆசிரியர்கள் காதைப்பிடித்து திருகி தலையில் கொட்டுவதும் அறிவு வளர்ச்சிதான் என்பதும் தெரிகிறது.
பிள்ளையார் சுழி!
சிலர் எழுத ஆரம்பிக்கும்போது பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுதத் துவங்குவார்கள். ஏனென்றால், வேதங்கள், வால்மீகி இராமாயணம் போன்றவைகள் எழுத்தால் எழுதப்படவில்லை, ஒருவர் சொல்ல மற்றவர்களால் செவி வழியே கேட்கப்பட்டதாம். மகாபாரத காலத்திலேதான் முதல் நூல் எழுத்து வடிவில் தோன்றியது. அந்த நூல் வியாசர் பாரதம், வியாசர் அந்த சுலோகங்களை வாயால் சொல்லச்சொல், அதை எழுதியவர் பிள்ளையார் என்பார்கள். அவர் தன் இடது பக்கத் தந்தத்தை ஒடித்து எழுதுகோலாக்கி எழுதினார். (அதனால்தான் பிள்ளையார்க்கு இடது பக்கத் தந்தப்பல் உடைந்து காணப்படுகிறது) எழுத்திலேயேமுதல் நூலை பொறித்தவர் என்பதால் அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் பிள்ளையார் சுழியைப் போட்டு எழுதத் துவங்குகிறார்கள்.
எங்கெல்லாம் தர்மமும், நீதியும் மறைந்து அதர்மமும், அநீதியும் தோன்றுகிறதோ அப்போது எல்லாம் அங்கே இறையருள் தோன்றும். அப்படித் தோன்றிய வித்தியாசமான வியப்பான விநாயகரின் உருவங்களை காணக்கிடைக்காத காட்சிகளை இங்கே கண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடுவோம்.