தேவையான பொருட்கள்:
தோல் நீக்காத உளுந்து - 100 கிராம்
வெல்லம் - 150 கிராம்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 10 கிராம்
திராட்சை - 8
பாதாம் பருப்பு - 4
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
கஞ்சி செய்வதற்கு முதலில் தோல் நீக்காத உளுந்து 100 கிராம் அளவு எடுத்து கொள்ளுங்கள். இதனை மூன்று முறை தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி கொள்ளவும். பிறகு நல்ல தண்ணீரில் ஆறு முதல் ஏழு மணி நேரம் வரை ஊறவைத்து கொள்ளலாம்.
உளுந்து ஊறிய பிறகு அதிலுள்ள தண்ணீரை வடிகட்டி ஒரு வெள்ளை துணியில் போட்டு கட்டி முளைகட்ட அனுமதிக்கவும். ஒரு சில்வர் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்து விட்டால் ஆறே மணி நேரத்தில் உளுந்து முளைக்க ஆரம்பிக்கும்.
முளைக்கட்டிய இந்த உளுந்தை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மொழு மொழுவென்று அரைத்து எடுத்து கொள்ளவும். இப்போது அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்த உளுந்தை அதில் சேர்க்கவும். நாம் எவ்வளவு உளுந்து சேர்த்திருக்கின்றோமோ அதற்கு ஐந்து மடங்கு அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் 150 கிராம் வெல்லத்தை பொடி செய்து சேர்க்கவும். வெல்லம் கரைந்த பிறகு அதனை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துவிடலாம்.
பின்பு கஞ்சியில் சேர்த்து உளுந்தின் பச்சை வாசனை போகும் வரை கிளறி கொண்டே இருக்க வேண்டும். பிறகு வெல்லத்தை ஊற்றவும். வெல்லத்தின் பச்சை வாசனை போகும் வரை ஐந்து நிமிடம் கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி முந்திரி பருப்பு, திராட்சை, பாதாம் பருப்பு மற்றும் ஒரு கையளவு தேங்காய் துருவலை சேர்த்து தாளித்து கஞ்சியில் சேர்க்கவும். கடைசியில் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்த்தால் உளுந்து கஞ்சி தயார்.