வழக்கமாகச் செய்வதைப்போலவே சிறுதானியங்களிலும் இடியாப்பம், உப்புமா, சப்பாத்தில என பல உணவுகளைத் தயார் செய்யலாம். சிறுதானியத்தில் சப்பாத்தி எப்படி செய்வது என்பது பற்றி பார்ப்போம்.
அவல் சப்பாத்தி செய்ய:
ஒன்றரை கப் சிறுதானிய அவலை எடுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். ஒரு கப் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி கடலை எண்ணெய், சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது அவல் மாவைச் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, பூரிக்குச் செய்வதுபோல் திரட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அல்லது சப்பாத்திபோல் தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். சிறுதானிய சப்பாத்தி தயார்.
தினை மாவு சப்பாத்தி செய்ய:
தேவையான பொருட்கள்: தினை மாவு - ஒரு கப், கோதுமை மாவு - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தினை மாவை போட்டு அதனுடன் கோதுமை மாவையும் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, அரை மணிநேரம் மூடி வைக்கவும். பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திபோல் தேய்த்து, வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு, சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும். சத்தான தினை மற்றும் கோதுமை மாவு சேர்ந்த சப்பாத்தி தயார்.