வாஸ்து சீர்த்திருத்தம் செய்யலாம் என்றால் அவ்வளவு எளிதில் செய்து விட முடிகிறதா? அதை இடித்து இதை இடித்து ஓய்ந்து போன நிலையில் இதை நீங்கள் இடித்திருக்க வேண்டாமே என்கிறார் ஒரு வாஸ்து நிபுணர்.
“வாஸ்து சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் மனை தான் திசைக்காட்டிக்கு சரியாக இல்லை”-என்கிறார் இன்னொரு வாஸ்து நிபுணர்.
ஜனங்கள் என்ன செய்வார்கள் பாவம்!
கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்செங்கோடு பட்டரைமேடு அருகில் ஏறத்தாழ 92 அடி அகலமும் 120 அடி நீளமும் உள்ள ஒரு இடத்திற்கு வாஸ்து பார்க நேரிட்டது.
மரக்கடையாக செயல்பட்டு வந்த இடத்தை அதன் உரிமையாளர் ஓரிரு மாதத்துக்கு முன்பு வேறொருவருக்கு விற்று விட்டார். புதிதாக வாங்கியவர்தான் என்னை அழைத்திருந்தார்.
பழைய உரிமையாளர் இடத்தை விற்றதற்கான காரணங்கள் இரண்டு;
1. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்.
2. தொழிலை கவனித்து வந்த அவரது முத்த மருமகன் திடீரென விபத்தில் இறந்து போன சோகம்.
இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால் தற்பொழுது இடத்தை வாங்கியவரும் தனது முத்த மருமகனுக்காகத்தான் வாங்கியிருக்கிறார்.
சரி,இடத்தின் அமைப்பை சற்று கவனிப்போம்.
மேற்கு பார்த்த, மேற்கில் மட்டுமே சாலை உள்ள இந்த இடம் திசைக்காட்டிக்கு ஏறத்தாழ 30 டிகிரி திரும்பியிருக்கிறது. தென்மேற்கு மூலையான நைருதி மூலை தெற்கே 16 அடிகள் வரை வளர்ந்துள்ளது. நைருதி வளர்வது தவறுதான். ஆனால், அதனால் மட்டுமே தொழில் முடக்கம் ஏற்பட்டு விடாது.
நைருதி மூலையில் பாரம் வேண்டும் என்பதற்காக ஒற்றை அறையுள்ள தரைத் தளமும் மேல் தளமுமாக ஓர் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் கட்டிடத்தின் வடமேற்கிலோ, தென்கிழக்கிலோ படிகள் அமையாமல் நைருதி மூலையிலேயே அமைந்துள்ளது பெருங்குறை.
ஆனால், இந்த படிகள் மட்டுமே ஒருவரது திடீர் மரணத்துக்கு காரணமாகிவிடாது.
சரி,வேற என்னதான் குறை? தவறு எங்கே நடந்திருக்கிறது? வடக்கில் பொதுச்சுவர் உள்ளது. இது மிகமிகத் தவறானது.
பொதுச் சுவர்தான் இருக்கிறதே என்ற எண்ணத்தில் வடக்கில் காம்பவுண்ட் போடவில்லை. அதனால் வடக்கில் உள்ள மற்றவரது பிரம்மாண்டமான கட்டிடம் இந்த இடத்துக்கு ஈசானிய பாரமாகி விடுகிறது.
மூலையில் கட்டப்பட்டுள்ள கடையும், அதன் கிழக்குச் சுவரையொட்டி அமைந்துள்ள இரண்டு கழிப்பறைகளும், ஈசானியக் கழிப்பறையாக மாறி ஆணின் ஆயுளைக் குறைக்கும் வேலையைச் செய்கின்றன.
வடக்கில் ஈசானிய மூலையிலிருந்து வாயு மூலை வரை கருங்கல் அஸ்திவாரம் ஒன்று முக்கோண வடிவில் நிலமட்ட அளவில் போடப்பட்டிருக்கிறது. ஏன் என்று விசாரித்தால். வளர்ந்துள்ள வாயு மூலையை குறைப்பதற்காகவாம்!. இப்படி ஒரு ஐடியாவைக் கொடுத்தது ஒரு வாஸ்து நிபுணராம்!!
ஒரு இடத்தில் எந்த மூலை வளர்ந்திருக்கிறது என்பதை அக்கம் பக்கத்திலுள்ள கட்டிடங்களையும், சாலை அமைப்பையும் வைத்துதான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, திசைக்காட்டி கருவியை மட்டும் வைத்து அல்ல.
ஒரு மனையின் வடக்குப் பகுதி 0டிகிரி இருக்க வேண்டும். கிழக்குப் பகுதி சரியாக 90 டிகிரி இருக்க வேண்டும் என்பது தவறான கொள்கை. சாலைகளுக்கு ஏற்ப திசை காட்டியின் டிகிரிகள் சற்று மாறுபடும்.
போனது போகட்டும். இனி இந்த இடத்தை எப்படி சரி செய்யலாம் என்று பார்ப்போம்.
1. வாயு மூலையை மூடி கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டும்.
2. 16 அடிகள் வளர்ந்துள்ள நைருதி (தென் மேற்கு) பகுதியை சுவர் வைத்துப் பிரித்து மேற்கு உச்சத்தில் அதற்கு தனிவாசல் வைக்க வேண்டும்.
3. மெயின் கேட்டை உச்சப் பகுதியான மேற்கு வாயவியத்துக்கு மாற்ற வேண்டும்.
4. அக்னியை மூடியுள்ள ஷெட்டின் மேற்கூரையை கிழக்கில் முன்று அடிகள் பிரித்து சூரிய வெளிச்சம் நிலத்தில் விழுமாறு செய்ய வேண்டும்.
5. வடக்கில் காம்பவுண்டு சுவர் அவசியம் கட்ட வேண்டும்.
இதுவே சீர்திருத்தப்பட்ட அமைப்பு.
குறிப்பு: பொதுவாக வாஸ்து சாஸ்த்திரத்தில் வளர்ச்சி தளர்ச்சி என்று எதுவும் கிடையாது. சொல் வழக்கில் பல வாஸ்து நிபுணர்கள் இந்த வார்த்தைகளை பயன் படுத்துகிறார்கள். இது தவறுதான்.