Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இல்லறம் இனிக்க இந்திரன் திசை

இல்லறம் இனிக்க இந்திரன் திசை
, திங்கள், 30 மே 2016 (22:00 IST)
எட்டுத் திக்குகளிலும் ஈசானியமே முதன்மையானது. ஈசானியத்தையும் ஆக்கினேயத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள கிழக்குத் திசையானது குடும்ப வாழ்விற்கு மிக மிக முக்கியமானது. ஆணையும் பெண்ணையும் இணைத்து வைத்ததுபோல ஈசானியத்தையும் ஆக்கினேயத்தையும் இணைத்துக்கொண்டிருக்கிறது கிழக்குத்திசை.


 

 
கிழக்குத் திசையைத் தான் இந்திரன்திசை என்கிறோம். இந்திரன் தேவர்களின் தலைவன். குபேரன், வாயு, வருணன், அக்னி என அனைவரும் அவனுக்குள் அடக்கம்.
 
 இந்திரன் என்றால் ‘இந்திரியம்’ என்று பெரும்பாலான தருணங்களில் நான் குறிப்பிடுவதற்கு காரணம், கிழக்குத் திசை மழலைச் செல்வத்தையும் மனமகிழ்ச்சியையும் அளிக்கும் திசை என்பதனால் தான்! கடந்த காலத்திலேயே உழன்று கொண்டிருப்பவர்களை நிகழ்காலத்திற்கு அழைத்துவந்து எதிர்காலத்தை நோக்கி சிந்திக்க வைப்பவன் இந்திரன்.
 
 இந்திரதிசையின் அதிபதி சூரியன். சூரியனின்றி கோள்கள் இல்லை. கோலாகலமும் இல்லை. வேதங்களில் இந்திரனின் மேன்மை குறித்த பாடல்கள் நிறைய உண்டு. அவற்றின் அர்த்தங்களை இங்கே ஆராய ஆரம்பித்தால் பிரமிப்பு உண்டாகும்.
 
பிரம்மஹத்தி தோஷத்தினால் பாதிக்கப்பட்ட இந்திரன், அந்த தோஷத்தை பூமாதேவியிடம் கொஞ்சமும், விருட்சங்களாகிய தாவர வர்க்கங்களிடம் கொஞ்சமும், மீதத்தை பெண்களிடமும் கொடுத்தான் என்கிறது புராணம். இந்த தோஷம்தான் பெண்களுக்கு ‘மாதவிலக்காக’ வெளிப்படுகிறது. இந்திரனின் தோஷத்தை வாங்கிய மரங்களும் தாவர வர்க்கங்களும் அதை பிசினாக வெளிப்படுத்துகிறது. பெண்களிடமோ அது மாதாந்திர சுழற்சியாக வெளிப்படுகிறது. அதனால்தான் பிராம்மணர்கள் சிரார்த்தம் போன்ற காரியங்களில் பெருங்காயத்தை உபயோகிக்க மாட்டார்கள். பெருங்காயமும் மரத்திலிருந்து வருகிற பிசின்தான்!
 
நாம் வேதத்தையும் அதன் விளக்கங்களையும், நம்பித்தான் ஆகவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஆனால் நமது முன்னோர்கள் எதையும் வெளிப்படையாக சொல்லாமல் சூத்திர வடிவில் சொல்லியிருக்கிறார்கள் 
 
பெண்மிருகங்கள் கருத்தரித்த பிறகு ஆண் மிருகங்களை அருகே நெருங்கவிடுவதில்லை. ஆனால், மனித இனம் அவ்வாறு அல்ல. ஒரு பெண் கருத்தரித்த பிறகும் அவளை நெருங்கும் வழக்கம் மனித இனத்தில் மாத்திரமே காணப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதைத்தான் இந்திரன் கொடுத்த வரம் என்கிறது வேதம்!
 
வீட்டில் கிழக்குத் திசை மூடப்படும் போது வேறு எந்த வாஸ்து பரிகாரங்களும் பலன் தருவதில்லை.
 
கணவன் மனைவியரிடையே எழும் எல்லா மனவருத்தங்களுக்கும் கிழக்குத் திசை மூடப்பட்டிருப்பதே காரணம். ஆகவே இனிய இல்லறத்துக்கு இந்திரன் அருள்பெற்ற கிழக்குத் திசையின் திறப்புதான் ஒரே வழி!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டின் எந்தத் திசையில் காலியிடம் இருக்கலாம்? : வாஸ்து