சுத்தமான சமையல் அறையில் சமைக்க வேண்டும் என்றால் எல்லோருக்கும் பிடித்தது தான். ஆனால் சமையல் அறையை சுத்தம் செய்வது யாருக்கும் பிடிக்காத ஒன்று.
அதிக சிரமமின்றி, குறைந்த நேரத்தில் பளபளப்பான, சமையல் அறையைப் பெற உங்களுக்காக சில குறிப்புகள்.
அலமாரி:
முதலில் சமையல் அறையில் உள்ள அலமாரிகளை சுத்தம் செய்வது நல்லது. அதில் உள்ள பொருட்களை கீழே வைத்துவிட்டு காய்ந்த துணியால் தூசியை துடைத்துவிடவும்.
ஒரு மேஜைக் கரண்டி எலுமிச்சை பழச் சாற்றுடன் 2 மேஜைக் கரண்டி தேங்காய் எண்ணெய் என்ற விகிதத்தில் தேவையான அளவு பாலிஷைத் தயாரிக்கவும். உங்கள் மரத்தால் ஆன அலமாரிகளை இதைக் கொண்டு பாலிஷ் செய்யவும்.
ஃபிரிட்ஜ்:
ஃபிரிட்ஜின் உள்பக்கத்தை சுத்தம் செய்தபிறகு, வெளிப்பக்கத்தை சுத்தம் செய்யவும்.
1/4 கோப்பை பேகிங் பவுடரை 1 1/2 லிட்டர் தண்ணீரில் கலக்கவும். இதைக்கொண்டு ஃபிரீஜர் மற்றும் உள்பக்கத்தை சுத்தம் செய்யவும்.
வெளிப்புறத்தை சோப்பு நீரில் நனைத்த துணியால் சுத்தம் செய்யவும்.
மைக்ரோவேவ் ஓவன்:
ஓவனில் வைக்கக்கூடிய பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பவும். அதில் சில துளிகள் எலுமிச்சை சாறை சேர்த்து ஓவனில் வைத்து கொதிக்க விடவும். அதன் பிறகு காய்ந்த துணியால் உட்புறத்தை துடைத்து விடவும்.
வெளிப்புறத்தை சோப்பு நீரில் நனைத்த துணியால் சுத்தம் செய்யவும்.
டைல்கள்:
சுவற்றில் உள்ள டைல்களை முதலில் சுத்தம் செய்துவிட்டு தரையில் உள்ள டைல்களை சுத்தம் செய்யவும்.
ஒரு வாளி தண்ணீரில் 3 மேஜைக் கரண்டி பாத்திரங்களை சுத்தம் செய்யும் லிக்விட்டை சேர்க்கவும். அதைக்கொண்டு முதலில் சுவரையும் பிறகு தரையையும் சுத்தம் செய்யவும்.
அடுத்தபடியாக ஒரு கோப்பை வினிகரில் (காடியில்) 1/2 கோப்பை தண்ணீரைச் சேர்த்து பாலிஷ் தயாரிக்கவும். அதைக்கொண்டு டைல்களை துடைக்கவும்.
அடுப்பு, மேடை:
அடுப்பிலும், அதை வைக்கும் மேடையிலும் சோடாவைத் தெளித்து 5 நிமிடம் ஊர வைக்கவும். அதன்பிறகு லேசாகத் தேய்த்து அழுக்கை நீக்கவும்.
இதோ உங்கள் பளபளக்கும் சமையல் அறை தயார்!