1. உளுந்தம் பருப்பை எப்போது ஊறப் போட்டாலும் ஃபிரிட்ஜில் குறைந்தது அரை மணி நேரம் வைத்து பிறகு அரைத்தால் மாவும் அதிகமாகக் கிடைக்கும். வடையும் அதிகம் எண்ணெய் குடிக்காது.
2. இரண்டு கப் பச்சரிசி மாவில் தேன்குழல், தட்டை முதலியவை செய்தால் சுமார் 250 கிராம் கிடைக்கும். ஒரு கப் புழுங்கலரிசி ஊறவைத்து அரைத்து செய்தால் சுமார் 300 கிராம் கிடைக்கும்.
3. ரவை வாங்கியவுடன் நன்றாக வறுத்து வைக்கவும். வண்டு, பூச்சி வராது.
4. ஃப்ரூட் சாலட் பண்ணுவதற்கு பழங்களை நறுக்கி சிறிது உப்புக் கரைத்த தண்ணீரில் கழுவி எடுத்து வைத்தால் பழங்கள் நிறம் மாறாது.
5. பாசிப் பயறு முளை கட்டுவதற்கு பயறை இரவில் ஊறப்போட்டு காலையில் தண்ணீரை வடித்துவிட்டு காணுரோலில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். மாலைக்குள் நன்றாக முளை கட்டிவிடும்.
6. துவரம் பருப்பைக் குக்கரில் வைக்கும் முன் 10 நிமிடங்கள் கொதிக்கும் நீரில் ஊறவைத்து, நாலைந்து சொட்டு நல்லெண்ணை விட்டு வேக வைத்தால் பருப்பு நன்றாகக் குழைந்துவிடும்.
7. அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊறவைத்து பின் சாதம் வைத்தால் சாதம் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும்.
8. பாயசத்திற்கு சர்க்கரையை நேரடியாகப் போடாமல் சர்க்கரையுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து சர்க்கரை நன்றாகக் கரைந்து ஒரு நிமிடம் கொதித்தபின் பாயசத்தில் சேர்த்து கொஞ்சம் கொதிக்க விட்டால் சுவை மிக நன்றாக இருக்கும்.
9. வாழைப் பூ, வாழைத் தண்டு ஆகியவற்றை வாங்கியவுடன் நறுக்கி மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும். காய் மூழ்கும்படி தண்ணீர் வைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஃமூடி பிரிட்ஜில் வைக்கவும். நாலைந்து நாள் கழித்துக் கூடச் சமையல் செய்யலாம். கலர் மாறாமல் இருக்கும்.
10. தேங்காய் முற்றலாக இல்லாமல் இளசாக இருந்தால் தேங்காய் துருவும்போது கொத்து கொத்தாக விழும். இந்த மாதிரி தேங்காய் இளசாக இருந்தால் உடைத்து ஃபிரிட்ஜில் சில மணி நேரம் வைத்திருந்து துருவினால் நன்றாக பூவாக விழும். முற்றிய தேங்காயை உடனே துருவி விடவும்.