கடந்த 2005 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான நான்காண்டுகளில் இந்தியாவில் இருந்து மொத்தம் 3,976 குழந்தைகள் வெளிநாடுகளுக்கு தத்துகொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் கிருஷ்ணா தீரத் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் கூறியதாவது :
மத்திய தத்துகொடுத்தல் வள முகமை (CARA) வாயிலாக நமது நாட்டிலிருந்து குழந்தைகள் அயல்நாடுகளுக்கு தத்து கொடுக்கப்படுகிறார்கள். அமெரிக்காவிற்கு 1500 பேர், டென்மார்க் 145, ஸ்பெயின் 320, இத்தாலி 679, சுவீடன் 210, ஐக்கிய அரபு நாடுகள் 163, சுவிட்சர்லாந்து 118, கனடா 116, ஆஸ்திரேலியா 85, ஜெர்மனி 82, பிரான்சு 92, நார்வே 84, இங்கிலாந்து 92, பெல்ஜியம் 71, நெதர்லாந்து 53 இந்திய குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளுக்கு குழந்தைகளை தத்து கொடுப்பதற்கான நெறிமுறைகளை கரா அமைப்பு வகுத்துள்ளது. நாடுகள் இடையே தத்து கொடுத்தல் தொடர்பாக ஹேக் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின் பேரிலும் இந்திய அரசு இந்த நெறிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு அமைப்புகள் கவனமாக பரிசீலித்த பின்பு நமது நாட்டிலிருந்து குழந்தைகள் வெளிநாடுகளுக்கு தத்து கொடுக்கப்படுகிறார்கள். தத்து கொடுக்கப்பட்ட பின்பு, இரண்டாண்டு காலத்திற்கு, அயல்நாட்டு அமைப்புகள் வாயிலாக இக்குழந்தைகளின் நிலை பற்றிய அறிக்கைகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பெறப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன என்று அமைச்சர் கிருஷ்ணா தீரத் தெரிவித்துள்ளார்.