நம்முடைய பூமிக்கு ஒரே ஒரு நிலா உள்ளது. இதைப் போலவே மற்ற கிரகங்களுக்கு நிறைய நிலாக்கள் உள்ளன. சனி கிரகத்திற்கு மட்டும் 61 நிலாக்கள் உள்ளன. இதைத் தவிர சுமார் 200 நிலவுக்குட்டிகள் உள்ளன.
இந்த 61 நிலாவில் மிகப்பெரிய நிலவான டைட்டனை ஆராய்வதில் தற்போது விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த டைட்டன் நமது பூமியின் தன்மையை ஒத்திருக்கிறதாம். பூமி என்றால், பூமி சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எந்த தன்மையில் இருந்ததோ அந்த தன்மையில் தான் தற்போது டைட்டன் உள்ளது.
டைட்டன் என்பது புதன் கோளை விடவும் பெரியது. சூரிய மண்டலத்திலேய மிகப்பெரிய நிலவான வியாழனின் நிலவான கானிமீடுக்கு அடுத்ததாக இந்த டைட்டன் உள்ளது.
பூமியை சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருந்தால் எவ்வாறு இருந்திருக்குமோ அப்படியே உள்ளது இந்த நிலாவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே இந்த டைட்டனை தொடர்ந்து ஆய்வு செய்து வந்தால், உயிரினங்கள் எவ்வாறு தோன்றியிருக்கும் என்று கண்டறிய முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
எனவே டைட்டனை ஆராயும் விதமாக காசினி என்ற ஆய்வுக்கலத்தின் மூலம் ஹைஜென்ஸ் கலத்தை விஞ்ஞானிகள் அனுப்பினர். ஹைஜென்ஸ் செய்த ஆய்வின்படி, டைட்டனில், பனிப்பாறைகள், கடற்கரை, கால்வாய்கள் போன்று நீர்நிலைகள் காணப்படுகின்றன என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சூரியக் குடும்பத்தில் பூமியைப் போன்று மேகங்கள் மற்றும் இரசாயன நிலைகளைக் கொண்ட இதுவரை அறியப்பட்ட இடமாக டைட்டன் கருதப்படுகிறது.
ஆனால் டைட்டனின் காற்று மண்டலம் மிகவும் அடர்த்தியாக இருப்பதையும் ஹைஜென்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், ஹைஜென்ஸ் செய்த ஆய்வின்படி, டைட்டனில் இருக்கும் காற்று ஆரஞ்சு நிறத்தில் இருக்கக் கூடும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். காற்றுக்கு நிறமில்லாததால்தான் பல்வேறு ஆய்வுகளை துல்லியமாக நாம் மேற்கொள்கிறோம். டைட்டனில் இருக்கும் அடர்த்தியான காற்றினால், ஹைஜென்ஸ் எடுத்த புகைப்படங்களில், தரைப்பகுதியில் என்ன இருக்கிறது என்பதை துல்லியமாக அறிய முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள்.