மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் இன்று மக்களவையில் தாக்கல் செய்த ரயில்வே நிதி நிலை அறிக்கையில் ரயில்வேயின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டக்களை வெளியிட்டுள்ளார்.
இதில் ரயில் போக்குவரத்து கண்காணிப்பு கருவியும் அடங்கும்.
ரயில் போக்குவரத்து கண்காணிப்பு கருவி
இந்தியாவில் இயக்கப்படும் அனைத்து ரயில்களையும் அடுத்த இரண்டு வருடங்களில் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. குறிப்பிட்ட ரயில் எந்தெந்த நிலையங்களுக்கு இடையே உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் வசதி மட்டும் உள்ளது.
இதுவும் ரயில் நிலையங்களில் உள்ள ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் உள்ள கருவியில் மட்டுமே தெரியும்.
இப்போது ரயில்களில் அமைக்கப்பட உள்ள நவீன கருவி மூலம் குறிப்பிட்ட ரயில் எந்தெந்த இடத்தில் உள்ளது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
இதனால் ரயில் வழித்தடத்தில் விபத்து ஏற்பட்டால் உடனடி உதவிக்கு உள்ளூர் நிர்வாகத்தை எச்சரிக்க முடியும்.
ரயில் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நேரம், பயண வேகம் போன்றவைகளையும், எந்த ரயில் நிலையங்களில் எத்தனை நிமிடம் நின்றுள்ளது என்பதையும் கண்காணிக்க முடியும்.
குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் ரயில் புறப்படுவது தாமதப்பட்டால் அதற்கான காரணம் என்ன? அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ரயிலில் ஏற தாமதமானதால் ரயில் தாமதமாக புறப்பட்டதா அல்லது ரயிலுக்கு கிடைக்க வேண்டிய சிக்னல் கிடைக்காத காரணத்தினால் தாமதப்பட்டதா என்பதை அறிய முடியும்.
வி.ஐ.பி. என்று அழைக்கப்படும் முக்கியஸ்தர்களுக்காக ரயில் காத்திருந்து தாமதமாக புறப்பட்டு சென்றது என்ற புகார், டிக்கட் கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் மற்ற பயணிகளிடம் இருந்து அடிக்கடி வருகிறது. இது உண்மையான புகாரா என்பது இந்த நவீன கருவி பொருத்துவதன் மூலம் தெரிந்து விடும்.
விமான போக்குவரத்தில் உள்ளது போல் விமானம் புறப்பட்டவுடன் தரை கட்டுப்பாடு தளத்துடன், விமானி இடைவிடாது தொடர்பு கொண்டு விமானத்தை இயக்குவது போல் ரயிலையும் இயக்கமுடியும்.