ரயில்வே நிதி நிலை அறிக்கையில் பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் குறைத்திருந்தாலும், ரயில்வேயின் வருவாய் 12 விழுக்காடு அதிகரிக்கும்.
மக்களவையில் இன்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் சமர்பித்த ரயில்வே நிதிநிலை அறிக்கையில், பெட்ரோல், டீசலுக்கு சரக்கு போக்குவரத்து கட்டணம் 5 விழுக்காடு, நிலக்கரி சாம்பலுக்கு சரக்கு போக்குவரத்து கட்டணம் 14 விழுக்காடு, வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பும் சரக்கு கட்டணம் 6 விழுக்காடு குறைப்பதாக அறிவித்தார்.
குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள முதல் வகுப்பு பயண கட்டணம் 7 விழுக்காடு, இரண்டாம் வகுப்பிற்கு 4 விழுக்காடு, மூன்றாம் வகுப்பு 2 விழுக்காடு, இரண்டாம் வகுப்பு மெயில், எக்ஸ்பிரஸ் பயண கட்டணங்கள் 5 விழுக்காடு குறைப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த கட்டண குறைப்பால் ரயில்வேயின் வருவாய் எந்த விதத்திலும் குறையாது. அதற்கு பதிலாக வருவாய் 12 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ரயில்வேயின் மொத்த போக்குவரத்து வருவாய் ரூ.81,801 கோடியாக அதிகரிக்கும். இது நடப்பு ஆண்டின் மதிப்பீட்டை விட ரூ,9,146 கோடி அதிகம்.
அடுத்த நிதி ஆண்டில் மறு மதிப்பீட்டின் படி சரக்கு கட்டண வருவாய் 10.38 விழுக்காடு அதிகரித்து வருவாய் ரூ.52,700 கோடியாக அதிகரிக்கும். இந்த நிதி ஆண்டில் சரக்கு கட்டண மறுமதிப்பீடு ரூ.47,743 கோடி.
இந்த ஆண்டு வேகன்களில் சரக்கு ஏற்றும் அளவு 8.2 விழுக்காடு அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் முதல் 9 மாதங்களில் வருவாய் ரூ.800 கோடி அதிகரித்துள்ளது.
சென்ற வருடம் பட்ஜெட் சமர்பிக்கும் போது இந்த நிதி ஆண்டில் ரயில்வே 7,850 லட்சம் டன் சரக்கை கையாளும் என மதிப்பிடப்பட்டது. ஆனால் தற்போதுள்ள சரக்கு போக்குவரத்து அளவை கணக்கிட்டால் இது 50 லட்சம் அதிகரித்து 7,900 லட்சம் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல் பயணிகள் கட்டண வருவாய் மறு மதிப்பீட்டின் படி ரூ.20,075 கோடியாக இருக்கும். இது அடுத்த நிதி ஆண்டில் எட்டு விழுக்காடு அதிகரித்து வருவாய் ரூ.21,681 கோடியாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.