Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரயில்வே பட்ஜெட்டில் என்ன சலுகைகள்?

Advertiesment
ரயில்வே பட்ஜெட்டில் என்ன சலுகைகள்?
, திங்கள், 25 பிப்ரவரி 2008 (17:44 IST)
webdunia photoWD
மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஐந்தாவது முறையாக நாளை சமர்ப்பிக்க உள்ள பட்ஜெட்டில் மக்களை கவரும் பல சலுகைகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் ரயில்வேயின் வருவாய் அதிகரித்து இருப்பதுடன், இலாபமும் உயர்ந்துள்ளது. மேலும் அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தலுடன், பல மாநில தேர்தல்களையும் சந்திக்க வேண்டும்.

இதற்கு ஏற்றார் போல் நாளை சமர்ப்பிக்கப்பட உள்ள ரயில்வே பட்ஜெட்டில் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதே போல் சரக்கு ரயிலை பயன்படுத்தும் தொழில் வர்த்தக துறையினருக்கும் கட்டண சலுகை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

ரயில் பட்ஜெட்டில் குளிர்சாதன வசதி உள்ள முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு கட்டணங்கள் குறைக்கப்படலாம். சதாப்தி, ராஜதானி ஆகிய சொகுசு விரைவு வண்டிகளில் இணையம், தொலைகாட்சி நேரடி ஒளி-ஒலி பரப்பு வசதிகள் செய்யப்படும்.

webdunia
webdunia photoWD
கடந்த ரயில் பட்ஜெட்டில் நெரிசல் காலத்தில் குளிர்சாதன வசதி உள்ள இரண்டாம் வகுப்புக்கு 2 விழுக்காடும், மற்ற காலங்களில் நான்கு விழுக்காடு கட்டணம் குறைக்கப்பட்டது. இதே போல் முதல் வகுப்பு குளிர் சாதன வசதிக்கு முறையே மூன்று மற்றும் 6 விழுக்காடு கட்டணம் குறைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

சென்ற பட்ஜெட்டில் விரைவு வண்டி, அதி விரைவு வண்டி அல்லாத மற்ற ரயில் டிக்கட் கட்டணம் ரூ.1 குறைக்கப்பட்டது. இதே போல் இந்த முறையும் கட்டண சலுகை இருக்கலாம் என்று தெரிகிறது.

இந்தியாவில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்கள், வரலாற்று புகழ் மிக்க இடங்களை இணைக்கும் வகையில் " பாரத் தர்சன்" என்ற பெயரில் புதிய ரயில் அறிமுகப்படுத்தப்படும்.

ஹெச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் பேருக்கு டிக்கெட் கட்டணத்தில் 75 விழுக்காடு சலுகை அறிவிக்கப்படலாம்.

webdunia
webdunia photoWD
குறிப்பிட்ட ரயில் நிலையங்களை எல்லா வசதிகளும் அடங்கிய " மாதிரி ரயில் நிலையங்களாக" தரம் உயர்த்தப்படும். இதற்கு எந்தெந்த ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன, அவைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்பது அறிவிக்கப்படும்.

அதிவேக ரயில்களை அறிமுகப்படுத்தும் சாத்தியக்கூறுகள் பற்றி ஆலோசிக்கப்படும்.

நாளை பட்ஜெட்டில் மும்பையின் புறநகர் ரயில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மும்பை புறநகர் இரண்டாவது கட்ட திட்டம் அறிவிக்கப்படும். இந்த திட்டம் நிறைவேற்றும் போது, மூன்று நிமிடம் இடைவெளியில் 12 பெட்டிகள் உள்ள மின் ரயில் இயக்கலாம்.

ரயில்வேயின் வருவாயை பெருக்குவதற்கு ரயில்களின் உட்புறங்களிலும் விளம்பரங்களை அனுமதிக்கும் திட்டம் அறிவிக்கப்படும்.

ரயில் பெட்டிகள், ரயில் நிலையங்களில் சுகாதாரமாக இருக்க தனியாக ரயில் சுகாதார பராமரிப்பு ஆணையம் அமைக்கும் திட்டமும் அறிவிக்கப்படும்.

ரயில்வேயின் வருவாயில் மூன்றில் இரண்டு பங்கு சரக்கு போக்குவரத்தில் இருந்து வருகிறது. பெட்ரோலிய பொருட்கள், இரும்பு தாது சரக்கு கட்டணம் நான்கு முதல் ஐந்து விழுக்காடு வரை குறைக்கப்படலாம் என்று தெரிகிறது.

தனியார் துறையுடன் கூட்டு சேர்ந்து நாட்டில் உள்ள 7,500 ரயில் நிலையங்களில் குளிர்பதன கிடங்கு கட்டுதல், ரயில்வேக்கு சொந்தமான 43 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பை தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து வர்த்தக நோக்கத்திற்கு பயன்படுத்தும் திட்டங்களும் நாளை அறிவிக்கப்படும்.


இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் சரக்கு கட்டணம் வருவாய் 11 விழுக்காடும், பயணிகள் கட்டண வருவாய் 14 விழுக்காடும் அதிகரித்து உள்ளது.

ரயில்வேயின் வருவாய் அதிகரித்துள்ள அதே நேரத்தில், ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தும் போது, ரயில்வேயில் பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் கூடுதலாக ரூ.9 ஆயிரம் கோடி செலவாகும்.

இந்த கூடுதல் செலவையும் கணக்கிட்டே ரயில்வே பயணிகள், சரக்கு கட்டண சலுகைகள் இருக்கும் என்று தெரிகிறது.

ரயில்வேயின் வருவாய் அதிகரித்து உள்ளதால், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பல சலுகைகளை நாளை அறிவிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil