பெண்களை தரக்குறைவாக பேசி தலைமறைவாக இருக்கும் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் வரும் சனிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.
நகைச்சுவை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் சமீபத்தில் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். இதற்கு பத்திரிகையாளர்களிடம் இருந்து கடும் கண்டனங்கள் குவிந்ததால் பின்னர் அந்த முகநூல் பதிவை நீக்கிவிட்டு தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டார்.இருப்பினும் எஸ்.வி.சேகருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை பத்திரிகையாளர்கள் நடத்தினர்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் காவல்துறையில் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் எஸ்.வி.சேகர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. அந்நிலையில், அவர் தலைமறைவாகி விட்டார் என்ற செய்தி வெளியானது.
ஆனால், தான் தலைமறைவாகவில்லை என்றும் பெங்களூரில் இருப்பதாகவும் இன்னும் மூன்று தினங்களில் சென்னை வரவுள்ளதாகவும் எஸ்.வி.சேகர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எஸ்.வி.சேகர் முன்ஜானின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் எஸ்.வி சேகரின் முன் ஜாமினின் மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வழக்கில் காவல் துறை விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை சனிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்