தமிழ்.வெப்துனியா.காம்: செவ்வாய் தோஷம் என்பது உடற்கூறு கோளாறா? அல்லது பிறந்த ஜாதக ரீதியான ஒரு அமைவா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: செவ்வாய் கிரகத்திற்கென்று சில காரகத்துவம் உண்டு. செவ்வாய் என்பது உடலின் இரத்த அணுக்களுக்குரிய கிரகம். அடுத்து, செவ்வாய்தான் பூமிக்குரிய கிரகம். இதே செவ்வாய்தான் உடன்பிறப்பிற்குரிய கிரகம். செவ்வாயுடன் ராகு வரும் போதெல்லாம் அவர்கள் மோசமான சூழ்நிலையில் பிறந்திருப்பார்கள். செவ்வாயுடன் கேது இருந்து அதை சனியும் பார்த்தால் அவர் வனத்தில் பிறந்திருப்பர் என்று இருக்கிறது. எந்தவொரு மருத்துவ உதவியும் இல்லாத இடத்தில் பிறந்திருப்பார்கள்.
செவ்வாயுடன் சூரியன் சேர்ந்து அதை குரு பார்த்தால் ஆசிர்வதிக்கப்பட்டச் சூழலில் பிறந்திருப்பார்கள். சூழல் என்பதையும் செவ்வாயை அடிப்படையாக வைத்துத்தான் சொல்கிறோம். செவ்வாய்தான் கிட்டத்தட்ட நிகழ்வுகளை நிர்ணயிக்கக்கூடிய கிரகம். அதாவது நடத்தை கோணங்கள் என்று சொல்வோமே, உடலில் நடத்தை கோணங்களை மாற்றக்கூடிய சக்தி செவ்வாய்க்கு உண்டு. மேலும் மரபனு (ஜீன்) என்பதெல்லாம் செவ்வாய்குரியது என்று சொல்வார்கள். ரத்த அணுக்கள், குறிப்பாக ஆண்களுக்கு விந்தணுக்கள், சுக்லம், சுரோகிதம் இப்படி எல்லாவற்றிற்கும் செவ்வாய் ஆதாரமாக இருக்கிறது.
செவ்வாய் தோஷம் என்றால் அது கொஞ்சம் அதிகப்படியானதுஎன்று அர்த்தம். இதை நாம் ஒரு குறைபாடு என்று சொல்லக்கூடாது. உதாரணத்திற்கு 110 வாட்ஸ் பவர் இருந்தால்தான் சில பல்ப்புகள் எரியும். அதையே அதிக வாட்ஸ் கொடுத்தால் அந்த பல்ப் ஃபியூஸ் ஆகிவிடும். குறைந்த வாட்ஸ்லயும் ஃபியூஸ் ஆகிவிடும். அதுதான் செவ்வாய். செவ்வாய் சரியான நிலையில் இருந்துவிட்டால் பிரச்சனையில்லை. வக்ரமடைந்தாலோ அல்லது 7, 8 ஆகிய இடங்களில் இருந்தாலோ அதனுடைய சக்தி அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரிக்கும் போது ஒரு மனிதனுடைய கோணத்தை மாற்றுகிறது.
காமத்தில் ஈடுபாடு மாறுபடும்!
செவ்வாய்தான் வீரியத்திற்குரிய கிரகம். வீராவேசமாகப் பேசுவதிலிருந்து, விந்தணுக்களுடைய வீரியத்திலிருந்து, ஆண் குறி எழுச்சியிலிருந்து அனைத்தையும் நிர்ணயிக்கக்கூடியது செவ்வாய்தான். இயல்பு நிலை, இயக்க நிலை என்று அனைத்தையும் நிர்ணயிக்கக்கூடியது செவ்வாய். ஆண், பெண் இருபாலருக்கும் செவ்வாயினுடைய அமைப்பு நன்றாக இருக்க வேண்டும். செவ்வாய் நீச்சமாகி சுபக் கிரக பார்வை இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு காமத்தில் ஈடுபாடு இருக்காது. இந்த மாதிரி ஆராய்ந்து பார்க்கும் போது, கல்யாணம் முடிந்து ஒரு வாரம் ஆகிறது. இன்னும் ஒரு வாரம் ஆகட்டும் என்று சொல்கிறார். எனக்கு மூடு இல்லை என்கிறார். இன்னும் ஒரு மாதம் போன பிறகு பார்க்கலாம் என்று சொல்கிறார் என்று சொன்னார்கள். ஜாதகத்தைப் பார்த்தால் ஒன்றுமே இல்லை. இந்த ஜாதகங்களை எப்படிச் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால் அந்தப் பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் கடுமையாக இருக்கிறது. ஆணுக்குச் செவ்வாய் தோஷமே இல்லை. அதாவது செவ்வாய் வலுவாக இல்லை. வலுவான செவ்வாய்க்கு வலுவான செவ்வாயை சேர்க்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுடைய உடலுறவு திருப்திகரமாக இருக்கும். அதுதான் செவ்வாய் தோஷம் என்பதே.
ஒருவர் வந்தார். செவ்வாய் தோஷம் என்று சொன்னேன். உடனே எழுந்து பிறகு உட்கார்ந்தார்கள். செவ்வாய் தோஷம் இருக்கிறது என்றதும் ஏன் எழுந்து உட்காருகிறீர்கள், ஒன்றுமே கிடையாது. செவ்வாய் என்பது ஒரு அமைப்பு. உங்களுடைய பெண்ணுடைய ஜாதகத்தில் செவ்வாயினுடைய அமைப்பு இந்த மாதிரி இருக்கிறது. இதைத்தான் தோஷம் என்று சொல்கிறார்கள். ஆனால் இன்றைக்கு 95 விழுக்காடு எல்லாமே செவ்வாய் தோஷக்காரர்கள்தான். 5 விழுக்காடுதான் செவ்வாய் தோஷம் இல்லை. இவர்களுக்குத்தான் பொருத்தம் கிடைப்பது கடினமாக இருக்கிறது. முன்பெல்லாம் செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு கிடைக்காது. இப்பொழுது செவ்வாய் தோஷம் இல்லாதவர்களும் கிடைப்பதில்லை.
அந்த பெண்ணுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு 6 பேர் வந்திருந்தார்கள். அவர்களிடம் சொன்னேன், உங்களுடைய பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் வலிமையாக இருக்கிறது, அதாவது செவ்வாய் வலிமையாக இருக்கிறது. அதை தோஷம் என்று சொல்லலாம் அவ்வளவுதான். செவ்வாய் வலிமையாக இருந்தால் தோஷம், சாதாரணமாக இருந்தால் ஓ.கே., செவ்வாய் பலவீனமாக இருந்தால் அது கடினம். அதற்கு இதே மாதிரி பலவீனமானவர்களுடன் சேர்க்க வேண்டும். செவ்வாய் தோஷம் வலிமையாக இருக்கிறவர்கள் தினசரி உடலுறவை விரும்புவார்கள். அல்லது ஒரே நாளில் இரண்டு, மூன்று முறை உடலுறவை விரும்புவார்கள். செவ்வாய் 3ஆம் இடத்தில் இருந்து, லக்னத்திற்கு 3, 4 என்றால் அது செவ்வாய் தோஷம். இவர்கள் போகத்தை மிகவும் விரும்புவார்கள்.
அந்த அளவிற்கு அவர்களுக்கு சக்தி இருக்குமா?
இருந்துகொண்டே இருக்கும். விந்தணு உற்பத்தியிலிருந்து, எண்ணங்களும் இருந்துகொண்டே இருக்கும். இந்த மாதிரியில்லாமல், வலிமையான பையனுக்கு நீச்சமான எங்கேயோ இருக்கிற ஜாதகத்தை சேர்த்தால் என்னவாகும். ஈடுபாடு இல்லாமல்... (அப்போ, செவ்வாய் தோஷத்தை இரண்டாக பார்க்க வேண்டும். வலிமையாக இருப்பது, பலவீனமாக இருப்பது). இப்படி பிரித்துப் பார்த்துதான் நாம் அதை சேர்க்க வேண்டும்.
செவ்வாய் என்பது என்ன ஆர்கன்ஸ் ஃபேக்ட். ரத்த அணுக்களுடைய மூலக்கூறுகளை நிர்ணயித்துப் பிரிக்கக்கூடியது. ஆண், பெண் பால் எனப்படும் பால் பிரிவுகளை நிர்ணயிக்கக்கூடிய குரோமோசோம்களை நிர்ணயிக்கும் சக்தியும் செவ்வாய்க்கு மிக அதிகமாக உள்ளது. செவ்வாயை தோஷம் என்றெல்லாம் திட்ட வேண்டிய அவசியம் கிடையாது. செவ்வாய் தோஷம் இருக்கிறதா. அப்ப, அவர்கள் மேற்படி விஷயத்தில் சரியாக இருப்பார்கள். அதில் ஏதாவது ஏமாற்றம் இருந்தால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அவர்கள் இன்னொரு துணையைத் தேட ஆரம்பித்துவிடுவார்கள். தோஷத்திற்கு தோஷம் சரியாக பார்க்கும் போது அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கை இனிமையாக இருக்கிறது. இரண்டு பேருக்கும் பரஸ்பரம் திருப்தி உண்டாகிறது. திருப்தி உண்டாகும் போது இன்னொரு இடத்திற்கு தாவுவது என்பது இல்லாமல் போகிறது. இப்படி முறையான இல்லறத்தை வாழ்வதற்கும், அமைப்பதற்கும் செவ்வாயினுடைய அமைப்பை ஆழமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. இதுதான் அதில் இருக்கிற உண்மை.
மற்றபடி அவர்களுடைய வாழ்க்கையில் குறை ஏதேனும்...
இல்லை, இல்லை. ஒரு குடும்பத்தில் கணவர் இறந்துவிட்டார். இந்த பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருந்து கட்டிக்கொண்டு வந்ததால் சிக்கலாகிவிட்டது என்பதெல்லாம் பொய். இந்த மாதிரி எதுவும் கிடையாது. செவ்வாயினுடைய நிலையை வைத்து அந்த வார்த்தையால் நாம் அதை குறிப்பிடுகிறோம். அவ்வளவுதானே தவிர, இதனால் மாற்றங்களோ, இழப்புகளோ ஏற்பட வாய்ப்பில்லை.
செவ்வாய் பலவீனமாக உள்ளவர்களுக்கு பரிகாரம் ஏதேனும் உண்டா?
கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்று சொல்வார்களே, அதுபோல் அதற்கு சமமானதை அதில் பொருத்த வேண்டும். அதுதான் வழி.