தமிழ்.வெப்துனியா.காம்: சிலருக்கு மரணம் இயல்பாக சிரமமில்லாமல் இருக்கிறது. ஆனால் சிலருக்கு நிண்ட காலமாக இழுத்துக்கொண்டே இருந்து பிறகு உயிர் பிரிகிறது. இப்படி சிரமம் கொடுத்து உயிர் பிரிவதும், சிலருக்கு சிரமமில்லாமல் உயிர் பிரிவதும் ஏன் நடக்கிறது?
ஜோதிட ரத்னா க.ப.வித்யாதரன்: 8ஆம் இடம் ஆயுள் ஸ்தானம். அந்த ஆயுள் ஸ்தான அதிபதி நன்றாக இருக்க வேண்டும். 8ஆம் இடத்தில் குரு, சுக்ரன், புதன், வளர்பிறைச் சந்திரன் போன்ற கிரகங்கள் இருந்தால், காலையில் எழுந்து குளித்து சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்து கொண்டு இருந்தால் போய்விட்டது என்று சொல்வார்களே அதுபோல் எல்லாம் நடக்கும்.
அதே 8ல் பாவ கிரகங்கள் எல்லாம் இருந்தால் மரணிக்கும் விதம் கடுமையாக இருக்கும். குறிப்பாக 8ல் சனி இருப்பவர்களையெல்லாம் பார்த்திருக்கிறோம். அதுபோன்றவர்கள் கடும் விபத்தில் அங்க ஈனமாகி உயிரிழப்பதையெல்லாம் பார்க்கிறோம். 8ல் சனி இருந்தாலே ஊனமாகி உயிரிழத்தல், இல்லையென்றால் சர்க்கரை நோய் அதிகமாகிவிட்டு ஒரு காலை எடுத்துவிட்டார்கள். பிறகு கொஞ்ச நாள் இருந்தார், அப்புறம் இறந்துவிட்டார் என்பது போலெல்லாம் கூட இருக்கும்.
8ல் செவ்வாய், கேது எல்லாம் இருந்து அவற்றை சனி பார்த்தால் மோசமான திசை வரும் காலத்தில் அவர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள். விஷம் அருந்தியோ, தூக்கு போட்டுக்கொண்டே தற்கொலை செய்து கொள்வார்கள். இதுபோன்ற பாதிப்புகள் தவிர, நாய் கடித்து, பாம்பு கடித்து இறப்பது போன்ற கிரக அமைப்புகள் எல்லாம் உண்டு. அதனால் ஆயுள் ஸ்தானமான 8ஆம் இடம்தான் தீர்மானிக்கும்.