நவம்பர் மாதம் 5ஆம் தேதி தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸ் சார்பில், சிறப்பு கைத்தறி கண்காட்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) துவங்க உள்ளது.
சிறப்பு கைத்தறி கண்காட்சியை நாளை காலை 10 மணிக்கு கைத்தறி துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைக்கிறார்.
தமிழகத்தில் இயங்கி வரும் பிரதம கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், கோ-ஆப்டெக்ஸ், காதிகிராப்ட், பூம்புகார் மற்றும் கைத்தறி குழுமங்களும், இந்த கண்காட்சியில் பங்கேற்று தங்களது உற்பத்திப் பொருட்களை விற்பனைக்கு வைக்கின்றன. வள்ளுவர் கோட்டத்தில் இந்த கண்காட்சிக்காக சுமார் 75 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த காண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் பலரும் விரும்பி வாங்கும் வகையில், காஞ்சிபுரம், திருப்புவனம், ஆரணி பகுதிகளில் உற்பத்தியான பட்டுப் புடவைகளும், சிறுமுகை, சேலம், பரமக்குடி கைத்தறி சேலை ரகங்களும் கண்காட்சியில் இடம்பெறும்.
இதுமட்டுமல்லாமல் கோவையில் உற்பத்தியான கோரா பட்டு, நெகமம் பருத்தி சேலை, பட்டு மற்றும் பட்டு ரக வேட்டிகள், லுங்கிகள், துண்டுகள், போர்வைகள், தலையணை உறை, திரைச்சீலை, தரை விரிப்புகள் மற்றும் கால் மிதியடிகளும் இந்த கண்காட்சி மற்றும் விற்பனையில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்கிழமையன்று துவங்கும் இந்த கண்காட்சி நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது, காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்காக இந்த கண்காட்சி திறந்திருக்கும்.