வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுக்கு உதவுவதற்காக வழிகாட்டிகளை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்தியில் குறிப்பில், தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காவான அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு ஆண்டுக்கு 17 லட்சம் பார்வையாளர்கள் வருகை புரிகின்றனர். வன உயிரினம் மற்றும் இயற்கை குறித்த முக்கியத்துவத்தை பூங்காவுக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு விளக்கும் வகையில் `உயிரியல் பூங்கா வழிகாட்டிகள்' திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தாவரவியல், விலங்கியல், வனவாழ் உயிரியல் மற்றும் வனவியலில் இளநிலைப் பட்டம் பெற்று இளமைத் துடிப்பும், ஆர்வமும் உள்ள நபர்கள் வழிகாட்டிகளாகப் பணிபுரிய வரவேற்கப்படுகிறார்கள்.
தேர்வு பெற்றவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறையால் வழங்கப்படும். பயிற்சிகள் முடிந்து வெற்றி பெற்றவர்கள், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உயிரியல் பூங்கா வழிகாட்டிகளாகப் பணியாற்ற அங்கீகார அட்டைகள் வழங்கப்படும். பூங்காவுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள், அவர்களது சேவையை பயன்படுத்திக் கொள்வார்கள்.
இவ்வழிகாட்டிகள், விலங்குகள் பற்றியும், அவற்றின் சிறப்பு இயல்புகள் பற்றியும் சுவாரசியமாக பயணிகளுக்கு எடுத்துக் கூறுவார்கள். அவர்கள் வழிகாட்டிகளாக பணிபுரிய ஆர்வமுள்ள நபர்கள் தங்கள் சுய விவரங்களுடன் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குனர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர், சென்னை-48 என்ற முகவரிக்கு 15.11.2010-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.