திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் எடையை பக்தர்கள் சரிபார்க்க, லட்டு வழங்கும் மை கவுண்ட்டர் எதிரில் மின்னணு தராசு வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலக அளவில் புகழ் பெற்றதாகும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒருவருக்கு ஒரு லட்டு என்ற விகிதத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது.
இப்படி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களின் எடை குறைவாக இருப்பதாக தேவஸ்தானத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, சரியான எடையில் தரமாக பக்தர்களுக்கு லட்டு வழங்க தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
லட்டு பிரசாதம் வழங்கப்படும் கவுண்ட்டர்களில் 2 கவுண்ட்டர்கள் திருப்பதி இஸ்கான் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
லட்டு கவுண்ட்டர்களில் பக்தர்களுக்கு உரிய முறையில் எடைபோட்டு லட்டுக்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த லட்டுக்களின் எடை சரியாக இருக்கிறதா? என்பதை கண்டறிய லட்டு வழங்கும் மையத்தின் எதிரில் எலக்ட்ரானிக்ஸ் தராசுகள் வைக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தராசு வைக்கும் பணி இன்னும் 2 வாரத்தில் நடைபெறும்.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை முதன்மை செயல் அலுவலர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.