தமிழகம் - கர்நாடகத்தின் எல்லைப் பகுதியில் உள்ள ஒகேனக்கல் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பி உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது. இதனால் வெள்ளி, சனிக்கிழமைகளில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அருவிகளில் வெள்ள நீர் கொட்டியதால், ஒகேனக்கல் அருவிகளில் பயணிகள் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இந்நிலையில் நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால் அருவியில் நீர் கொட்டுவது இயல்பாக இருந்தது. இதனால் வெள்ள அபாயம் நீங்கியது. இதன் பிறகு ஒகேனக்கல் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இதனால் மகிழ்ச்சி அடைந்து, அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.