விமானங்களில் பயணம் செய்வோர், விமானம் தரையிறங்கியதும் செல்பேசியில் பேசும் வசதி வரும் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.
பொதுவாக விமானங்களில் பயணம் செய்வோர், விமான நிலையத்தில் விமானம் ஏறிய பிறகு, சென்று சேர வேண்டிய இடத்தில் இறங்கி விமானத்தில் இருந்து வெளியே வந்த பிறகு தான் செல்பேசியை ஆன் செய்து பேச முடியும். விமானி அறையில் இருந்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடன் செல்லும் தகவல் தொடர்பு சிக்னலுக்கு செல்போன் சிக்னல்கள் இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த விதி கடைபிடிக்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த விதிகளில் சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குநர் அலுவலகம் திருத்தம் செய்துள்ளது. அதன்படி, விமானம் தரை இறங்கி, ஓடு தளம் வழியாக சென்று நிறுத்தத்துக்கு வந்தடைந்த உடனேயே செல்பேசியை ஆன் செய்து பேசலாம். இந்த நடைமுறையானது வருகிற வெள்ளிக்கிழமை அதாவது அக்டோபர் மாதம் 22ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், விமான நிலையத்தில் பனிமூட்டம் போன்ற மோசமான வானிலை நிலவினால் செல்பேசியில் பேச முடியாது. விமான நிலையத்தினுள் விமானம் தரை இறங்கிய உடனேயே, செல்போன்களை பயன்படுத்தும் அறிவிப்பினையும் விமான பணிப்பெண்கள் வெளியிடுவார்கள். அதன்பிறகு விமான நிலையததில் தனது வருகைக்காக காத்திருக்கும் தனது உறுவினர்களுக்கு பயணிகள் செல்பேசியில் தொடர்பு கொண்டு விமானம் தரையிறங்கிவிட்டதைக் கூறலாம்.