சுற்றுலா என்பது நம் அன்றாட வாழ்க்கைச் சூழலில் பெற முடியாத ஒரு மகிழ்ச்சியையும், பல புதிய இடங்களை பார்ப்பதால் அடையும் திருப்தியையும் கொடுப்பதாகும். ஆனால் அந்த சுற்றுலாவை நாம் பாதுகாப்பான முறையில் செய்தால்தான் அது நம் நினைவில் நீங்கா இடம் பிடிக்கும்.
பாதுகாப்பான சுற்றுலா சென்று வருவதற்கான சில குறிப்புகள் :
பலரும், பகல் பொழுதை சுற்றுலா தலங்களைக் காண்பதற்கு ஒதுக்கிவிட்டு, பயணத்திற்காக இரவு நேரத்தை தேர்வு செய்வார்கள். ஆனால், பயணத்திற்காக இரவு நேரத்தை தேர்வு செய்வது மிகவும் தவறாகும். பல விபத்துக்கள் இரவு நேரத்தில்தான் நடக்கின்றன. எனவே முடிந்த வரை பகல் நேரத்திலேயே உங்களது பயணத்தை வைத்துக் கொள்ளுங்கள். இரவில் நன்றாக தூங்கினால்தான் உங்களால் சுற்றுலா தலங்களை உற்சாகத்துடன் காண முடியும்.
நீங்கள் சுற்றுலா செல்லும் இடங்கள் பாதுகாப்பானவையா என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அபாயம் நிறைந்த இடங்களுக்கு சுற்றலா செல்வதை தவிர்த்துவிடுங்கள். அதிலும் குடும்பத்துடன் இதுபோன்ற இடங்களுக்குச் செல்வது முறையல்ல.
ஒரு இடத்தில் மாலை இத்தனை மணி வரை தான் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று அனுமதிக்கப்பட்டிருந்தால் அந்த நேரத்திற்குள்ளாக அங்கிருந்து புறப்பட்டுவிடுங்கள். அது உங்களுக்கு பாதுகாப்பை அளிக்கும்.
சிறு பிள்ளைகளுடன் செல்பவர்கள், சுற்றுலா செல்வதற்கு முன்பாகவே, தங்கும் இடங்களுக்கான அறைகளை பதிவு செய்து கொள்வது நல்லது.
சுற்றுலாவிற்கு வந்த இடம்தானே என்று கண்ட இடத்தில் புகைப்பது, மது அருந்துவது, தீ மூட்டி குளிர்காய்வது போன்றவற்றை செய்ய வேண்டாம். இதில் ஏதாவது ஒன்று உங்களது பாதுகாப்பிற்கே கேள்விக்குறியாக முடியலாம்.
நீங்கள் வனப்பகுதிக்குச் செல்ல விரும்பினால், அங்கிருக்கும் காட்டு விலங்குகள் பற்றியும், சில விஷச் செடிகள் பற்றியும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
நீர் நிறைந்த பகுதிகளுக்குச் செல்லும் போது விளையாட்டாக குளிக்கலாம் என்று நண்பர்கள் அழைத்தாலும் அதனை மறுப்பது நல்லது. நீர் நிலைகளை (கடற்கரை) கண்டு ரசிக்கலாமேத் தவிர அதை அசுத்தப்படுத்தவோ, அதில் குளிப்பதற்காகவோ நீங்கள் சுற்றுலாவிற்கு வரவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சுற்றுலா செல்லும் இடங்களில் கிடைக்கும் தண்ணீரை அப்படியேக் குடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள். தண்ணீரில் பரவும் வியாதிகள்தான் அதிகம். இதனால் நீங்கள் மோசமான நோய்களைக் கூட அனுபவிக்க வேண்டி வரலாம். எனவே பாதுகாப்பான தண்ணீரை குடியுங்கள்.
பயணத்தின் போது பாதுகாப்பற்றச் சூழலை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக அருகில் இருக்கும் காவல்துறையையோ அல்லது அருகில் இருப்பவர்களையோ உதவிக்காக அழைக்கலாம்.
நீங்கள் தற்போது எந்த இடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களது நண்பர் அல்லது உறவினர் ஒருவருக்காவது அவ்வப்போது தெரிவித்துக் கொண்டிருப்பது நல்லது.
வெளியூர்களுக்கு 10 நாட்களுக்கு மேல் சுற்றுலா செல்வதாக இருந்தால் அருகில் உள்ள காவல்நிலையத்தில் தெரிவித்துவிட்டுச் செல்வது உங்கள் வீட்டைப் பாதுகாக்க உதவும். நீங்களும் நிம்மதியாக இருக்கலாம்.
அதிக விலை மதிப்புடையப் பொருட்களை எடுத்துச் செல்வதை தவிர்த்துவிடுங்கள். தேவையற்ற டெபிட, கிரடிட் கார்டுகளையும் பாதுகாப்பாக உங்கள் வீட்டிலேயே வைத்து விடுவது நல்லது.
அலுவலகத்தில் விடுமுறை எடுத்து சுற்றுலா செல்வதாக இருந்தால், முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துவிடுங்கள். இல்லை என்றால் சுற்றுலா செல்லும் தலங்களில் இது பற்றிய தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டி வரும்.
வீட்டில் அனைவரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பைகளை பாதுகாக்கும்படி அறிவுறுத்துங்கள். இதனால் ஏதேனும் ஒரு பை தொலைந்துவிட்டது என்று தேடுவதும், கவலைப்படுவதும் தவிர்க்கப்படும்.
இன்னும் பல தகவல்கள் உள்ளன.. அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.