மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்ற மலை ரயில் எஞ்ஜினின் ராடு உடைந்ததால், அந்த ரயில் மேற்கொண்டு இயங்க முடியாமல் நடுக்காட்டில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த ரயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 7.10 மணிக்கு ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இந்த ரயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது மலைப் பயணத்தை எண்ணி களிப்புடன் இருந்தனர்.
ஊட்டிக்குப் புறப்பட்ட ரயில் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பவானி ஆறு ரயில்வே பாலம்-கல்லார் ரயில்வே கேட் இடையே சென்றபோது திடீரென்று ரயில் என்ஜினின் வலது பக்கத்தில் இருந்த ராடு உடைந்தது. இதனால் ரயில் தொடர்ந்து செல்ல முடியாமல் நடுகாட்டில் நிறுத்தப்பட்டது.
அந்த ரயில் இயங்காது என்று அறிந்த சுற்றுலாப் பயணிகள், ரயிலில் இருந்து இறங்கி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை ரயில் பாதை வழியாகவே நடந்து கல்லார் ரயில்வே கேட்டை அடைந்தனர்.
நடக்க முடியாதவர்கள் சிலரை அந்த வழியாக வந்தவர்கள், தங்களது வாகனத்தில் ஏற்றி ஊட்டி முக்கிய சாலைக்கு கொண்டு வந்து விட்டனர். தங்களது சுற்றுலாப் பயணத்தை இனிமையாகக் கழிக்க எண்ணி ஊட்டிக்கு வந்த பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டனர்.