அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள இலவச திட்டங்களை நிறைவேற்றினால் தமிழகத்தின் நிதிச்சுமை மேலும் ரூ. 50 ஆயிரம் கோடி அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைசர் ஜெயலலிதா, அதிமுகவின் தேர்தல் அறிக்கையை நேற்று ஈரோட்டில் வெளியிட்டார். அதில் மாணவர்களையும், பெண்களையும் கவரும் வகையில் பல இலவச திட்டங்களை அறிவித்தார். பால் விலை குறைப்பு, 100 யூனிட் வரை இலவச மின்சாரம், மகளிர் பைக் வாங்க 50 சதவிகித மானியம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், விவசாயக் கடன் ரத்து என ஏராளமான சலுகைகளை அறிவித்தார்.
ஆனால், அவற்றையெல்லாம் நிறைவேற்றினால், தமிழக அரசுக்கு கடன் சுமை பல மடங்கு அதிகரிக்கும். அதாவது ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதிச்சுமை ஏற்படும் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அமுல்படுத்த ரூ.15 ஆயிரம் கோடியும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய ரூ.5,500 கோடியும், அரசு கேபிள் டிவி இணைப்பு பெற்றவர்களுக்கு செட்டாப் பாக்ஸ் வழங்க ரூ.1500 கோடியும், பொதுமக்களுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.2,200 கோடியும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.2,200 கோடியும் தேவைப்படும்.
அதேபோல், பால் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.8,800 கோடியும், பொங்கல் தினத்தன்று கொடுக்கப்படும் ரூ.500 பரிசுக் கூப்பனுக்கு ரூ.1000 கோடியும், திருமண உதவி திட்டத்தில் மணப் பெண்னுக்கு ஒரு பவுன் வழங்க ரூ.200 கோடியும் செலவாகும் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்
மேலே கூறியவையெல்லாம் ஒரு ஆண்டிற்கு மட்டும்தான். அதாவது ஒரே தடைவையாக ரூ.55 ஆயிரம் கோடியும், மொத்தமாக 5 ஆண்டுகளுக்கு செலவிட ரூ.70 கோடி வரை தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இலவசங்கள் மற்றும் திட்டங்களுக்கு ரூ.1.5 லட்சம் கோடி வரை தேவைப்படும்.
என்னதான் டாஸ்மாக் மூலம் வருமானம் வந்தாலும், இந்த திட்டங்களை நிறைவேற்ற, தமிழக அரசு கண்டிப்பாக கடன் வாங்க வேண்டியிருக்கும். அதனால் தமிழகத்தின் நிதிச்சுமை அதிகரிக்கும் என வல்லுனர்கள் கூறுகிறார்கள்.