ஓ.பன்னீர்செல்வம் மீது அவதூறு: ராஜேஷ் லக்கானிக்கு கடிதம்
ஓ.பன்னீர்செல்வம் மீது அவதூறு: ராஜேஷ் லக்கானிக்கு கடிதம்
, வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (08:42 IST)
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து அவதூறு செய்திகள் வெளியிடுவதை தவிர்க்க தனியார் தொலைக்காட்சிகளுக்கு உத்தரவிடவேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு அவர் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
ராஜேஷ் லக்கானிக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வழக்கறிஞர் முத்தையா கண்ணன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஓ.பன்னீர்செல்வத்தைப் பற்றிய தவறான செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக தனியார் தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சிகளுக்கு தொடர்புடைய தொலைக்காட்சிகள் ஓ.பன்னீர்செல்வத்தை தேவையில்லாமல் குறிவைத்து, அவருக்கு எதிராக அவதூறு கருத்துகளையும் தவறான செய்திகளையும் வெளியிட்டு வருகின்றன.
பொள்ளாச்சியில் குதிரைப்பண்ணை வைத்திருக்கும் கால்நடை மருத்துவர், ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருங்கிய நண்பர் என்றும் அவரது வீட்டை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டதாகவும் செய்தி வெளியிடப்பட்டது.
அவரது வீட்டில் சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் தங்கியதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அப்படிப்பட்ட நபரை அவருக்குத் தெரியாது.
குறை கூற முடியாத அளவுக்கு அரசியல் வாழ்க்கையை ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வருகிறார். மீண்டும் அதிமுக அமைச்சரவை அமைக்க வாய்ப்புள்ள சூழ்நிலையில், உள்நோக்கத்தோடு இப்படிப்பட்ட அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்த தவறான செய்தியை வெளியிட்ட டி.வி., பத்திரிகைகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிமை உண்டு. இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மீதும் அவர் சார்ந்த கட்சி மீதும் அவதூறான மற்றும் தவறான செய்தியை வெளியிடுவதை தடுப்பது அவசியமாகும்.
எனவே அப்படிப்பட்ட செய்திகள் வெளியிடுவதை தவிர்க்கவேண்டும் என்று சம்பந்தப்பட்ட பத்திரிகைகள், தனியார் டி.வி.களுக்கு நீங்கள் உத்தரவு பிறப்பிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.