தமிழக சட்டபேரவை தேர்தலில் அதிமுக பெற்றுள்ள வெற்றியின் மூலம், பணநாயகம் வென்றுள்ளது என்று மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஊழல் பணநாயகம் வென்றுள்ளது. அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை வாரி இறைத்து வாக்குகளை வாங்கி இருக்கின்றன. தமிழகத்தில் இந்த நச்சுச் சுழல் தொடர விடாமல், மக்கள் ஆட்சித் தத்துவம் காக்க உத்வேகத்துடன் தொடர்ந்து போராடுவோம்.
மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்ல அகரம் எழுதி இருக்கின்ற தேசிய முற்போக்கு திராவிட கழகம் -மக்கள் நலக் கூட்டணி -தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்து அமைத்த கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்கு அளித்த வாக்காளப் பெருமக்களுக்கும், தேர்தல் களத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபட்ட தேமுதிக - மறுமலர்ச்சி திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி -தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளின் செயல்வீரர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ் நாட்டில் ஊழல் பணநாயகத்திற்கு எதிராக மக்கள் நலனையும், ஜனநாயகத்தையும் காக்க நாங்கள் அமைத்துள்ள ஆறு கட்சிகளின் கூட்டணி மிக்க உறுதியுடன், வலுவாக தமிழக அரசியல் களத்தில் இயங்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.