ஜெயலலிதா நாளை ஆர்.கே நகரில் மக்கள் முன் பிரச்சாரம் செய்யும் போது அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பற்றி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விட்டன. ஆனால், ஆளும் கட்சியான அதிமுக இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை.
இதனால், அதுபற்றி ஏராளமான வதந்திகள் கிளம்பியது. இலவச மோட்டார் சைக்கிள், வாஷின் மிஷின், ஃபிரிட்ஜ் என ஏராளமான இலவசங்களை அளித்து மக்களை கவரும் வண்ணம் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே. நகரில் போட்டியிடுகிறார். நாளை அவர் அங்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தனது வேன் மூலம் வீதி வீதியாக சென்று அவர் மக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்து வருகிறார்கள். அவர் பிரச்சாரம் செய்யும் இடங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
நாளை நிறைந்த அமாவாசை தினம் என்பதால், தேர்தல் பிரச்சாரத்திற்கும், அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிடவும் ஜெயலலிதா தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த தேர்தல் அறிக்கையில் முக்கிய திட்டங்கள், சலுகைகள், இலவசங்கள் இடம் பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என்று அரசியல் நோக்கர்களும், பல்வேரு தரப்புகளும் எதிர்நோக்கியுள்ள நிலையில் அதிமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கு பின்பு தேர்தல் இன்னும் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது.