Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குணத்தின் மீது செயலின் விளைவு: சுவாமி விவேகானந்தர்

Advertiesment
குணத்தின் மீது செயலின் விளைவு: சுவாமி விவேகானந்தர்
, வியாழன், 23 செப்டம்பர் 2010 (18:55 IST)
FILE
செய்தல் என்று பொருள்படுவதான ‘க்ர’ என்ற சம்ஸ்கிருத மூலத்திலிருந்து தோன்றியது கர்மம் என்ற சொல். எல்லா செயல்களுமே கர்மம்தான். செயல்களின் விளைவுகளையும் இந்தச் சொல் குறிக்கும். தத்துவம் சம்மந்தமாக வரும்போது இந்தச் சொல் சிலவேளைகளில் நமது முன்வினைகளின் விளைவுகளையும் குறிக்கும். ஆனால் கர்மயோகத்தில், கர்மம் என்ற சொல்லை ‘செயல்’ என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்துகிறோம்.

மனித சமூதாயத்தின் குறிக்கோள் அறிவு. கீழை நாட்டுத் தத்துவம் நம் முன் வைத்துள்ள ஒரே இலட்சிமும் இதுவே. மனிதனின் இலட்சியம் இன்பம் அல்ல, அறிவே. இன்பமும் போகமும் ஒரு முடிவுக்கு வதே தீரும். இந்த இன்பத்தை இலட்சியமாக எண்ணுவது தவறு. தான் அடைய வேண்டிய இலட்சியம் இன்பமே என்று மனிதன் முட்டாள்தனமாக நினைப்பதுதான் இன்று உலகில் காணப்படும் எல்லாவிதமான துன்பங்களுக்கும் காரணம். ஆனால் அவன் சென்று கொண்டிருப்பது இன்பத்தை நாடி அல்ல, அறிவைத் தேடியே. இன்பமும், அதுபோல் துன்பமும் பெரிய ஆசிரியர்கள், நன்மையைப் போலவே தீமையிலிருந்தும் அவன் படிப்பினை பெறுகிறான். இவையெல்லாம் காலப்போக்கில் அவனுக்குத் தெரியவருகிறது. இனபமும் துன்பமும், மனித மனத்தைக் கடந்து செல்லும்போது, அவை அதன் மீது பல்வேறு அனுபவங்களைப் பதித்துச் செல்கின்றன. இந்த மொத்தப் பதிவுகளின் விளைவே குணம் (Character) என்று அழைக்கப்படுகிறது.

எந்தவொரு மனிதனின் குணத்தை எடுத்துக் கொண்டாலும் உண்மையில் அது அவனது மனப்போக்குகள் அனைத்தின் மொத்தம், மனப்பாங்கின் திரட்சியே தவிர வேறல்ல. எனவே குணத்தை உருவாக்குவதில் துன்பமும் இன்பமும் சரிசமமான பங்கு வகிக்கின்றன. குணத்தைச் செப்பனிடுவதிலும் நன்மை, தீமை இரண்டிற்கும் சமயிடம் உண்டு. சிலவேளைகளில் இன்பத்தைவிடத் துன்பமே சிறந்த ஆசிரியராக அமைகிறது. உலகம் தந்துள்ள உயர்ந்த மனிதர்களின் வாழ்வை ஆராய்ந்தோமானால், பெரும்பாலோரது வாழ்க்கையில் இன்பங்களை விடத் துன்பங்களே, செல்வத்தைவிட வறுமையே அவர்களுக்குப் பாடமாக அமைந்துள்ளது. புகழ் மொழிகளைவிட ஏமாற்றங்களே, அடிகளே அவர்களது அக ஆற்றல்களை வெளியே கொண்டு வந்துள்ளன என்று நான் துணிந்து கூறுவேன்.

இந்த அறிவு என்பது மனிதனிடம் இயல்பாக இருக்கின்ற ஒன்று. எந்த அறிவும் மனிதனுக்கு வெளியேயிருந்து வருவதில்லை, அவை உள்ளேயே இருக்கின்றன. ஒரு மனிதன் ‘அறிகிறான’ என்பதைச் சரியான மன இயல் மொழியி்ல் ‘கண்டுபிடிக்கிறான’ அல்லது ‘திரையை விலக்குகிறான’ என்றே சொல்ல வேண்டும். அதுபோலவே ஒரு மனிதன் ‘கற்கிறான’ என்பது உண்மையில் அவன் எல்லையற்ற அறிவுச் சுரங்கமாகிய தன் சொந்த ஆன்மாவை மூடியிருக்கும் திரையை விலக்கிக் கண்டுபிடிப்பதையே குறிக்கும். நியூட்டன் புவியீர்ப்பைக் கண்டுபிடித்தார் என்று கூறுகிறோம். அது ஒரு மூலையில் உட்கார்ந்து அவருக்காகக் காத்துக் கொண்டா இருந்தது? அது அவரது மனத்தில் இருந்தது, தருணம் வந்தது, அவர் கண்டுபிடித்தார்.

இதுவரை உலகம் பெற்றுள்ள எல்லா அறிவும் மனத்திலிருந்து வந்ததேயாகும். பிரபஞ்சத்தின் எல்லையற்ற நூற்களஞ்சியம் உங்கள் சொந்த மனத்திற்குள்ளேயே இருக்கிறது. புறவுலகம், நீங்கள் உங்கள் மனத்தை ஆராய்வதற்காக அமைந்த வெறும் ஒரு தூண்டுகோல், ஒரு வாய்ப்பு மட்டுமே. ஆனால் நீங்கள் ஆராயப் போகின்ற பொருளும் உங்கள் மனம்தான். மரத்திலிருந்து ஆப்பிள் வீழ்ந்தது நியூட்டனுக்கு ஒரு தூண்டுதலாக அமைந்தது. அவர் தன் மூலம் தன் மனத்தை ஆராய்ந்தார். ஏற்கனவே தன் மனத்திலுருந்து சிந்தனை தொடர்களை எல்லாம் முறைப்படு்த்தித் திருத்தி அமைத்தபோது அவற்றுக்கு இடையே ஒரு புதிய தொடர்பைக் கண்டுபிடித்தார். அதை நாம் ‘புவியீர்ப்பு விதி’ என்று கூறுகிறோம். இந்த விதி ஆப்பிளிலோ அல்லது பூமியின் மையத்திலோ இருக்கவில்லை.

லெளகீக அறிவோ, ஆன்மீக அறிவோ எல்லாமே மனத்தில்தான் இருக்கிறது. பலரிடம் இவை கண்டுபிடிக்காமல் மூடப்பட்டிருக்கிறது. மூடியிருக்கின்ற திரைகள் மெல்லமெல்ல நீக்கப்படும்போது நாம் ‘கற்கிறோம’ என்று சொல்கிறோம். நாம் பெறுகின்ற அறிவின் அளவு, இந்தத் திரையை விலக்குகின்ற அளவைப் பொறுத்தே அமைகிறது. இந்தத் திரை யாரிடமிருந்து தூக்கப்பட்டிருகிறதோ, அவன் அதிகம் தெரிந்துவன். யாரிடம் இந்தித் திரை கனமாக இருக்கிறதோ, அவன் அறிவிலி. திரை முழுவதுமாக நீங்கப்பெற்றவன் எல்லாம் தெரிந்தவன் ஆகிறான். எல்லாம் அறிந்தவர்கள் இப்போதும் இருக்கிறார்கள், எதிர்காலத்திலும் இருப்பார்கள் என்றே நான் நம்புகிறேன். இனி வரும் யுகங்களிலும் இலட்சக்கணக்கில் அவர்கள் தோன்றுவார்கள்.

சிக்கிமுக்கிக் கல்லில் நெருப்புபோல் மனத்தில் அறிவு இருக்கிறது. புறத்தூண்டுதல்தான் அதை வெளியே கொண்டு வருகின்ற உராய்வு. நம்மையே நாம் அமைதியாக ஆராய்ந்து பார்த்தோமானால் நமது கண்ணீர்கள், நமது புன்முறுவல்கள், நமது மகிழ்ச்சிகள், நமது கவலைகள், நமது அழுகைகள், நமது சிரிப்புகள், நமது சாபங்கள், நமது வாழ்த்துக்கள், நமது பாராட்டுக்கள், நமது ஏச்சுக்கள் என்று நமது எல்லா உணர்ச்சிகளும் செயல்களும் வெளியிலிருந்து தரப்பட்ட பல்வேறுத் தாக்குதல்களின் மூலம் நமக்குள்ளிருந்தே வெளியே கொண்டு வரப்பட்டன என்பதை அறியலாம். இந்தத் தாக்குதல்களை மொத்தமாகக் கர்மம் அல்லது செயல் என்று கூறுகிறோம். தூல நிலையாகட்டும், மனத்தளவில் ஆகட்டும், மனித்திற்குக் கொடுக்கின்ற அடிகள் ஒவ்வொன்றும், அங்கே ஏற்கனவே மறைந்திருக்கின்ற அதன் சொந்த ஆற்றலையும் அறிவையும் வெளிப்படுத்துகிறது. அதவாது அவை கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த ஒவ்வோர் அடியும் கர்மமே. இங்கு கர்மம் மிகப்பரந்த பொருளில் பயன்படுத்துப்படுகிறது.

(தொடரும்)

புத்தகத்தின் பெயர்: கர்ம யோகம

சுவாமி விவேகானந்தர

வெளியீடு: ஸ்ரீ இராமகிருஷ்ணா மடம்
மயிலாப்பூர், சென்னை 600 004

Share this Story:

Follow Webdunia tamil