Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ர‌ஞ்சித்தின் இரு படங்கள்

ர‌ஞ்சித்தின் இரு படங்கள்
, திங்கள், 11 ஜூலை 2011 (14:56 IST)
மலையாள சினிமாவின் தரம் தாழ்ந்து வருகிறது என்ற குற்றச்சாற்றை பல வருடங்களாக கேட்டு வருகிறோம். மலையாளிகளே பிரதானமாக இந்தக் குற்றச்சாற்றை முன் வைக்கிறார்கள். அவர்கள் விரும்பி ரசிக்கும் வெகுஜன சினிமாவின் தரம் தாழ்ந்துவிட்டதான வருத்தம் அவர்களுக்கு இருக்கிறது.

இந்நிலையில் இரு திரைப்படங்களை பார்க்க நேர்ந்தது. இரண்டும் கலைப் படங்கள் என்று சொல்லக் கூடிய வகை மாதி‌ரியை சேர்ந்தவையல்ல. கமர்ஷியல் வகை. இரண்டு படங்களை இயக்கியதும் ஒரே இயக்குனர், ரஞ்சித்.

முதலாவது பலோ‌ரி மாணிக்கம். இது வெளியாகி ஒருசில வருடங்கள் ஆகிறது. பிராஞ்சியேட்டன் ஒன்றரை வருடங்களுக்குள் இருக்கும். இரண்டிலும் நாயகன் மம்முட்டி.

பலோ‌ரி மாணிக்கத்தின் கதை ஐம்பதுகளிலும், இன்றைய காலகட்டத்திலும் மாறி மாறி வருகிறது. ஐம்பதுகளில் பலோ‌ரி என்ற கிராமத்தில் ஒரு பிறப்பு, ஒரு கொலை, ஒரு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை ஒரே இரவில் நடக்கிறது. அன்று பிறந்த மம்முட்டி இப்போது எழுத்தாளர். கதை எழுதும் நோக்கில் பலோ‌ரியின் மர்மமான கொலைகள் இரண்டை குறித்தும் விசா‌ரிக்கிறார். இந்தப் பின்னணியில் ஐம்பதுகளில் கொலைகள் அரங்கேறிய இரவின் மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன.

படத்தின் கதை‌யினூடாக ஐம்பதுகளில் கேரளாவில் கம்யூனிஸ்ட்களின் காலகட்டம் தொடங்கியதையும், அது இளை‌ஞர்கள் மத்தியில் ஏற்படுத்திய எழுச்சியையும் இயல்பாக படம் சொல்லிச் செல்கிறது. அத்துடன் கம்யூனிஸ்ட் கட்சியின் சில தலைவர்களின் மேட்டிமை மனோபாவத்தையும், கட்சியின் வளர்ச்சிக்காக நீதியை சுயநலத்துடன் வளைப்பதையும் ரஞ்சித் காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தின் ஆகச் சிறந்த விஷயம் கதாபாத்திரங்கள். ஸ்வேதாமேனன், மம்முட்டி, ஸ்வேதாமேனனின் மகன் என படத்தில் வரும் முக்கியமான கதாபாத்திரங்கள் அனைத்தும் மனித அழுக்கையும், இயலாமையையும் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறார்கள்.

மலையாள சினிமாவின் வர்த்தகம் சிறியது. குறைவான பட்ஜெட்டில் எடுத்தால் மட்டுமே லாபம் பார்க்க முடியும். பலோ‌ரி மாணிக்கத்தின் ஒளிப்பதிவும், கலை இயக்கமும் பிரமிக்க வைக்கின்றன. குறைவான செலவில் ஐம்பதுகளின் காலகட்டத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். எல்லா வகையிலும் இதனை ஒரு நல்ல படம் என்று தாராளமாகச் சொல்லலாம். மிடில் சினிமாவை கனவு காண்பவர்களுக்கு பலோ‌ரி மாணிக்கம் சிறந்த உதாரணம்.

பிராஞ்சியேட்டன் படத்தின் தொடக்கமே நம்மை கதைக்குள் இழுத்துச் செல்கிறது. நடுத்தர வயது மம்முட்டி தனது மூதாதையர்களின் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றுகிறார். அவர் சற்று நகர்ந்ததும் மூதாதையர்கள் ஒவ்வொருவராக கல்லறையிலிருந்து வெளியே வந்து தங்களது வா‌ரிசைப் பற்றி பேசுகிறார்கள். அதில் ஒருவர், பிராஞ்சியே... எல்லாம் நல்லா நடக்கும். நீ iதா‌ரியமா போ என்று மறைந்து நின்று அவர்களின் உரையாடலை கேட்கும் மம்முட்டியிடம் கூறுகிறார். இதில் பிராஞ்சி என்பது மம்முட்டியின் கதாபாத்திரத்தின் பெயர். யேட்டன்... அண்ணன்.

அதன் பிறகு மம்முட்டி கோவிலுக்கு வருகிறார். அங்கு சிலையாக நிற்கும் புனிதர் பிரான்சிஸின் முன்னிலையில் பிரார்த்தனை செய்கிறார். திடீரென்று புனிதர் மனித உருவத்துடன் மம்முட்டி முன் தோன்ற, அவா‌ரிடம் தனது குறைகளை மம்முட்டி சொல்லத் தொடங்குகிறார்.

பேன்டஸிக்குள் இந்தப் படம் எந்த சிரமமும் இல்லாம் இயல்பாக நுழைந்து விடுகிறது. இது அபூர்வம். ப்ராங்க் காப்ராவின் இட்ஸ் ஏ வொண்டர்ஃபுல் லைஃப் படத்தை பல வகையிலும் பிராஞ்சியேட்டன் நினைவுப்படுத்தும். காப்காவின் நாயகனைப் போலவே பிராஞ்சியேட்டனும் நல்லவர், நல்லதை மட்டுமே நினைப்பவர். இரு படங்களும் மனிதனின் நற்குணங்களை விழிப்படையச் செய்யக் கூடியவை.

பிராஞ்சியேட்டனின் ஒரே மனக்குறை பணம், சொத்துக்கள் இருந்தும் சமூகத்தில் நல்ல பெயர் இல்லாதது. அ‌ரிசி வியாபாரம் என்பதால் சின்ன வயதிலிருந்தே அவரை அ‌ரி பிராஞ்சி என்றே அனைவரும் அழைக்கிறார்கள். இதனால் புதிய கௌரவத்துக்காக பணத்தை வா‌ரி இறைக்கிறார். பத்மஸ்ரீ பட்டம் கிடைத்தால் அ‌ரி பிராஞ்சி என்ற பெயர் மாறும் என்பதற்காக அதற்கும் முயன்றுப் பார்க்கிறார். வாழ்க்கை என்பது பெயா‌ரில் இல்லை அது மனதில் இருக்கிறது. நல்லதை நினைப்பவர்களுக்கு நல்ல வாழ்க்கையே அமையும் என்பதை பிராஞ்சியேட்டனுடன் நாமும் உணர்கிறோம்.

புனிதர் பிரான்சிஸ் இயல்பாக, டேய் அ‌ரிபிராஞ்சி என்று உரையாடும் காட்சிகள் கடவுள், புனிதர் போன்ற கருத்துருக்களை புரட்டிப் போடுகின்றன. மதம் உருவாக்கி வைத்திருக்கும் புனிதா‌ரிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நமக்கு இன்னும் அணுக்கமாக தோன்றுகிறார் புனிதர் பிரான்சிஸ். குஷ்பு, ப்‌ரியாமணி, சித்திக், இன்னசென்ட் ஆகியோரும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

ரஞ்சித் மலையாளத்தின் கவனிக்கத்தக்க இயக்குனர் என்பதை இந்த இரு படங்களும் உறுதி செய்கின்றன. மீண்டும் குறிப்பிடுகிறோம்... ரஞ்சித்தின் படங்கள் அடூர், அரவிந்தன் வகையைச் சேர்ந்தவையல்ல. மிடில் சினிமாக்கள். மலையாளிகள் வருத்தப்படும் அளவுக்கு அவர்களின் சினிமா கீழிறங்கிவிடவில்லை என்ற நம்பிக்கையை தருகின்றன இவ்விருப் படங்களும்.

Share this Story:

Follow Webdunia tamil