வால்பாறையில் இருந்து.... டாப் ஸ்லிப் வரை
, வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:08 IST)
வால்பாறையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது! கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மேடு பள்ளங்களாக அந்த மலைப்பகுதியில் எங்கு நோக்கினும் பச்சை பசேலென்று கம்பளி போர்த்தப்பட்டது போல தேயிலைத் தோட்டங்கள்.அதிகாலையில் பனி மூட்டம் மூடியிருக்கும் வேளையிலும் மழைக்காலங்களில் மேகங்கள் உருவாகி தேயிலைத் தோட்டங்களைத் தழுவிச் செல்லும் காட்சி கண்ணுக்கு விருந்து, நெஞ்சிற்கு சுகம், கற்பனைக்கு ஊற்று.தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே ஓடும் ஒரு நதி, பல திரைப்படங்களில் பாடல் காட்சிகளில் இடம்பெற்ற இடம். இங்குள்ள தோட்டங்களுக்கு இடையே ஒரு பெருமாள் கோயிலும் உண்டு. மலையின் உச்சியில் அழகாகக் கட்டப்பட்டுள்ள அக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்குப் பின்னர் இரண்டு மூன்று மணி நேரம் அமைதியாகக் கழிக்கலாம். இப்பகுதிகளில் நாம் நகரங்களில் காணும் அணில் செந்நிறத்தில் இருப்பதை காணலாம்.அந்த அணில்களின் படங்கள் கூட அரியதாக இருக்கிறது. தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே மான் குட்டிகள் துள்ளி ஒடும் காட்சியும் அருமையானது. வால்பாறை அழகை ரசித்துவிட்டு பொள்ளாச்சியை நோக்கி இறங்கும் மலைப்பாதை 30க்கும் அதிகமான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. ஒரு இருபது வளைவுகளைக் கடந்த பின்னர் கீழேயுள்ள ஆழியாறு அணையின் எழிலைக் காணலாம். அற்புதமான காட்சி அது.ஆழியாறை நெருங்குவதற்கு முன்பு வண்டியை நிறுத்துங்கள். அங்கு ஓர் அருவி உள்ளது. குரங்கருவி, மிகச் சிறிய அருவிதான் என்றாலும், அருவிக்கு சற்று முன்னால் குளம் போல நீர் தேங்கி இருக்கும் பகுதியில் அமர்ந்து கொண்டு சுகமாகக் குளிக்கலாம்.
காலை நேரத்தில் குரங்கருவிக்கு நீராடச் செல்பவர்களுக்கு குறைந்த விலையில் வீட்டில் சுட்ட இட்லி, தோசை, வடை கிடைக்கும். மிக ருசியாக இருக்கும். புறப்படுங்கள் அங்கிருந்து.... தமிழக - கேரள எல்லையில் உள்ள டாப் ஸ்லிப்பை நோக்கி. இந்திராகாந்தி தேசியப் பூங்கா என்று அழைக்கப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு உட்பட்டது டாப் ஸ்லிப். இங்குள்ள பெரிய மரங்களை வெட்டி உருட்டிவிடுவார்களாம். தடையேதும் இன்றி அந்த கட்டைகள் மலையடிவாரத்திற்கு வந்து விழுமாம். அதனால் டாப் ஸ்லிப் என்று பெயர் வந்தது.இவ்விடத்தின் உண்மை பெயர் வேட்டைக்காரன் புதூர். இங்கு பிளாஸ்டிக் பொருட்களோ, இரைச்சல் போடும் இசைக் கருவிகளுக்கோ, போதைப் பொருட்களுக்கோ அனுமதி இல்லை. மறைத்துக் கொண்டு போய் சிக்கனால் சிறைதான்.டாப் ஸ்லிப்பின் நுழைவுப் பகுதியிலேயே மிக விசாலமான புல் வெளியைக் காணலாம். அங்குள்ள தமிழ்நாடு வனத்துறையின் விருந்தினர் மாளிகைகளில் தங்கும் வாய்ப்பு கிடைத்தால் இரவில் உலவ வரும் கரடியில் இருந்து சிறுத்தை வரை எல்லாவற்றையும் பார்க்கலாம்.
டாப் ஸ்லிப்பில் இருந்து காட்டிற்குள் சென்று சுற்றிப்பார்க்க யானை சவாரி வசதி உள்ளது. இங்கிருந்து மேலும் சிறிது தூரம் சென்றால் கேரள எல்லை. கேரள எல்லைப் பகுதிக்குள் போகும் அந்த சாலையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் வாகனத்தில் சென்றால் தமிழகமும், கேரளமும் இணைந்து நிர்வகித்து வரும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் வரும் 3 அழகிய அணைக்கட்டுகளைப் பார்க்கலாம்.
ஒன்று பெருவாரிப்பள்ளம், மற்றொன்று தூணக்கடவு, எல்லாவற்றுக்கும் மேல் இறுதியாக அந்த சாலையின் முடிவாக மலையின் உச்சியில் பரம்பிக்குளம் தண்ணீரை தேக்கி வைக்க கட்டப்பட்டுள்ள பரம்பிக்குளம் அணை. 2700 அடி உயரத்தில் இந்த அணை உள்ளது.
இப்பகுதி மிக அருமையான பொழுதுபோக்கிடமாகும். மலையும், நீரும், பறவைகளின் ஒலியும், காற்றும் சுகமான அனுபவங்கள்.
வேட்டைக்காரன் புதூரில் இருந்து பரம்பிக் குளம் அணை வரை செல்லும் பாதையில் ஆங்காங்கு நிறுத்தி அடர்ந்த வனப்பகுதியை ரசித்துப் பார்க்கலாம்.
இரண்டு நாட்கள் போதும். ஒரு நாள் வால்பாறை, மறுநாள் டாப் ஸ்லிப். மனதுக்கு இதம் தரும் இனிய சுற்றுலாவாக இருக்கும்.