Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிசம்பர் 1-ந் தேதி முத‌‌ல் சுற்றுலா பொருட்காட்சி

டிசம்பர் 1-ந் தேதி முத‌‌ல் சுற்றுலா பொருட்காட்சி
, புதன், 3 நவம்பர் 2010 (13:19 IST)
சென்னை தீவுத்திடலில் சுற்றுலா தொழில் பொருட்காட்சி டிசம்பர் 1-ந் தேதி தொடங்கி, 75 நாட்கள் நடைபெறும் என்று அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறினார்.

தமிழக சுற்றுலா துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் சென்னை தீவுத்திடலில் நேற்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகை‌யி‌ல், சுற்றுலா துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் டிசம்பர் இறுதியில் சுற்றுலா தொழில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 37-வது சுற்றுலா பொருட்காட்சி டிசம்பர் 1-ந் தேதி தொடங்கி 75 நாட்கள் வரை நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் ஏற்பாட்டு பணிகள் முடிந்துவிடும்.

26 மாநில அரசின் அரங்குகள், 13 அரசு பொதுத்துறை நிறுவனங்களின் அரங்குகள், 2 மத்திய அரசின் அரங்குகள், 3 இதர மாநிலங்களின் அரங்குகள் என மொத்தம் 44 அரங்குகள் இடம்பெறும். அரசின் அரங்குகள், அரசு திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதாக அமைந்திருக்கும்.

கடந்த ஆண்டு கிராமப்புற சுற்றுலாவை மையப்படுத்தி பொருட்காட்சி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு சுற்றுலாவும் பல்லுயிர் பெருக்கமும் என்பதை மையமாக கொண்டு நடத்த முடிவு செய்துள்ளோம். மலைகள், மலைகள் சார்ந்த இடங்களை முன்னிலைப்படுத்தி அரங்குகள் அமைக்கப்படும். முதுமலை வனவிலங்கு சரணாலயத்தை நேரில் சென்று கண்டுகளித்த உணர்வை ஏற்படுத்தும் வண்ணம் அரங்குகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

பொதுமக்களை கவரும் வண்ணம் பிரம்மாண்டமான கேளிக்கை வளாகம், பல நவீன விளையாட்டுகள் இந்த ஆண்டின் சிறப்பு அம்சங்களாக இருக்கும். பொருட்காட்சியின் முகப்பு `டிஸ்னி லேண்ட்' வடிவமைப்பில் அமைக்கப்படும். கடந்த ஆண்டைப் போல கலைநிகழ்ச்சிகள், இசைநிகழ்ச்சிகள், பட்டிமன்றங்களும் உண்டு. நுழைவுக்கட்டணம் எவ்வளவு என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. வழக்கம்போல், மாணவ-மாணவிகளுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படும். பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேரு‌ந்துகள் விடவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

சுற்றுலா பொருட்காட்சியை பொருத்தவரையில் ஆண்டுதோறும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும், வருமானமும் அதிகரித்து கொண்டே வருகிறது. 2005-ம் ஆண்டில் 9 லட்சம் பார்வையாளர்கள் பொருட்காட்சியை கண்டுகளித்தனர். அப்போது வருமானமாக ரூ.80 லட்சம் கிடைத்தது. கடந்த ஆண்டு 17 லட்சம் பேர் பார்வையிட்டனர். வருமானம் ரூ.2 கோடியே 8 லட்சம் ஆகும். இந்த ஆண்டு 20 லட்சம் பேர் பொருட்காட்சியை பார்வையிட வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எனவே, வருமானமும் கணிசமான அளவு அதிகரிக்கும் எ‌‌ன்று அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறினார்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக நிர்வாக இயக்குனர் ஏ.சி.மோகன்தாஸ் பேசுகை‌யி‌ல், ``இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாவிலும் மருத்துவ சுற்றுலாவிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உள்நாட்டு சுற்றுலாவில் 3-ம் இடம் வகிக்கிறது. முதலிடம் வகிக்கும் ஆந்திராவில் திருப்பதி கோவில் இல்லாவிட்டால், இதேபோல், 2-ம் இடம் வகிக்கும் உத்தரப் பிரதேசத்தில் தாஜ்மகால், மதுரா இல்லாவிட்டால் உள்நாட்டு சுற்றுலாவிலும் தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கும்'' என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil